ஹிஸ்புல்லா-இஸ்‌ரேலுக்கு இடையே கடுமையான மோதல்.

லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்‌ரேலியப் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தியதை அடுத்து, செப்டம்பர் 22ஆம் தேதியன்று ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இஸ்‌ரேலிய ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இஸ்‌ரேலின் வடக்குப் பகுதிக்குள் ஏவுகணைகளைப் பாய்ச்சி ராணுவ இலக்குகளைத் தகர்த்ததாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது.

செப்டம்பர் 21ஆம் தேதியன்று 290 இலக்குகளைத் தகர்த்ததாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏவுகணைப் பாய்ச்சும் கருவிகள் அழிக்கப்பட்டதாக இஸ்‌ரேல் தெரிவித்தது.

ஈரான் ஆதரவில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அது கூறியது.

இதற்கிடையே, ஈராக் மற்றும் லெபனானிலிருந்து இஸ்‌ரேலை நோக்கி இரவு முழுவதும் பல ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன.

இதனால் இரவு முழுவதும் இஸ்‌ரேலில் எச்சரிக்கை மணி ஒலித்தது.

ஹிஸ்புல்லா பாய்ச்சிய ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை சுட்டு வீழ்த்திவிட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

இருப்பினும், ஹிஸ்புல்லா போராளிகள் பாய்ச்சிய ஏவுகணைகளால் பல கட்டடங்கள் சேதமடைந்தன.

இஸ்‌ரேலின் ஹைஃபா நகரில் வீடு ஒன்று மிகக் கடுமையாகச் சேதமடைந்ததது.

தாக்குதலில் காயமடைந்தோருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

எவரும் மரணமடையவில்லை என்று நம்பப்படுகிறது.

ஏவுகணைகள் பாய்ச்சப்படுவதற்கு முன்பே, வெடிகுண்டு துளைக்க முடியாத அறைகளில் இருக்குமாறு அப்பகுதி மக்களுக்கு உத்தரவிடப்பட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தாக்குதல்களுக்கு முன்பாகவே இஸ்‌ரேலின் வடக்குப் பகுதியிலும் இஸ்‌ரேல் வசம் உள்ள கோலான் ஹைட்ஸ் பகுதியிலும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன.

அங்கு அப்பகுதி மக்கள் ஒன்றுகூடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகப் பாதிப்பு பேரளவில் குறைக்கப்பட்டதாக இஸ்‌ரேலிய அதிகாரிகள் கூறினர்.

லெபனான் மீது இஸ்‌ரேல் நடத்தும் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்க இஸ்‌ரேலியா விமானப் படை முகாம் ஒன்றைக் குறிவைத்து தாக்கியதாக ஹிஸ்புல்லா கூறியது.

லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகளைக் குறிவைத்து இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பிறகு இருதரப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

பெய்ரூட்டில் இஸ்‌ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது என்று லெபனானிய சுகாதார அமைச்சு செப்டம்பர் 22ஆம் தேதி தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.