சிறார் பாலியல் காணொளிகளைப் பார்ப்பது, பதிவிறக்குவது குற்றம்: இந்திய உச்ச நீதிமன்றம்.

சிறார் பாலியல் காணொளிகளைப் பதிவிறக்கம் செய்வதும் பார்ப்பதும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின்கீழ் குற்றங்களாகக் கருதப்படும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிறார் பாலியல் காணொளிகளைப் பார்ப்பதைப் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகக் கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

அத்தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘அது குற்றமே’ எனத் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 23) தீர்ப்பளித்துள்ளது.

குற்றவியல் வழக்குகளை ரத்து செய்ததில் சென்னை உயர் நீதிமன்றம் ‘மிகப்பெரிய தவறு’ இழைத்துவிட்டதாகச் சுட்டிய உச்ச நீதிமன்றம், அதன் தீர்ப்பை ரத்து செய்து, குற்றவியல் வழக்கை மீட்டெடுத்தது.

சிறார் பாலியல் சுரண்டல் காணொளிகளை ஒளிபரப்பாமல் அல்லது பரப்பாமல், ஒருவர் அதனை வைத்திருப்பதும் காண்பதும் குற்றமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஆனால், அத்தகைய காணொளி கிடைக்கப் பெற்றால் அதுபற்றி உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்காததும் குற்றமாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இவ்வாண்டு ஜனவரி 11ஆம் தேதி, 28 வயது ஆடவர் ஒருவர் சிறார் பாலியல் காணொளியைப் பதிவிறக்கம் செய்து, பார்த்தது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.