முல்லைத்தீவு மாவட்டத்தின் கொவிட் 19 தொடர்பில் விசேட கூட்டம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொவிட் 19 தொடர்பில் விசேட கூட்டம்
தற்போது நாட்டில் வேகமாக பரவிவரும் கொவிட் 19 தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விசேட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருடனான விசேட கலந்துரையாடல் இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்த்தல், பொதுப் போக்குவரத்து சேவையில் நடைமுறைப்படுத்த வேண்டிய சுகாதார நடைமுறைகள், சுற்றுநிரூபத்திற்கமைய மேலதிக அறிவித்தல்கள் வரும்வரை தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தல், கடற்கரையோர பகுதிகளை கண்காணித்தல், வெளிமாவட்டங்களிற்கு சென்று வந்தோர் தொடர்பான தகவல்கள் மற்றும் அவை தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள், கடந்த காலங்களில் செயற்பட்டதைப் போன்று சுகாதார வழிமுறைகளான கைகழுவுதல் மற்றும் மாஸ்க் அணிவது தொடர்பில் மக்களை அறிவுறுத்தல் போன்றதான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் கொவிட் 19 செயலணியின் விசேட கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டீபன், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச சபை செயலாளர்கள், மீன்பிடி திணைக்கள உதவிப் பணிப்பாளர், பிரதேச சபை தவிசாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், அரசாங்க மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.