மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் போர் வெடிக்கும் சூழல் அதிகரித்துள்ளதால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க தற்காப்பு அமைச்சு கூடுதல் படைகளை அவ்வட்டாரத்திற்கு அனுப்பியுள்ளதாக திங்கட்கிழமை தெரிவித்தது. எத்தனை படைகளை அது அனுப்பியுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையில் சண்டை நிறுத்தத்தை கொண்டுவர அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடுமாறிவரும் நிலையில் இஸ்ரேல் – லெபனான் பூசல் புதிய தலைவலியை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – லெபனான் இடையிலான பூசலை அரசதந்திர முறையில் தீர்க்க அழைப்புவிடுத்துள்ளார்.

அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சிடம் அரசதந்திர முறையில் தீர்வுகாண தினமும் பேசிவருவதாகக் கூறப்படுகிறது.

ஹிஸ்புல்லாமீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் ஈரான் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இதனால், மத்திய கிழக்கில் போர் ஏற்படும், இதில் அமெரிக்கப் படைகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று கவனிப்பாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல்மீது ஈரான் 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை பாய்ச்சியது. அதன்பின்னர் அமெரிக்கா அவ்வட்டாரத்தில் அதன் படைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது.

Leave A Reply

Your email address will not be published.