இளம் பொலிஸாரைத் தவறான முறைக்கு உட்படுத்த முயன்ற பொலிஸ் பொறுப்பதிகாரி.

யாழ்ப்பாணத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தவறான முறைக்குட்படுத்த முயற்சி செய்த பொலிஸ் பொறுப்பதிகாரி மீது விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ். காங்கேசன்துறை பொலிஸ் விசேட பிரிவின் பொறுப்பதிகாரி, அங்கு கடமை புரியும் 25 வயது மதிக்கத்தக்க பொலிஸ் உத்தியோகத்தரையே இவ்வாறு தவறான முறைக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த ஜூன் மாதம் 8ஆம் திகதி, காங்கேசன்துறை விசேட பொலிஸ் பிரிவில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களை, அவர்களது பொறுப்பதிகாரி, சேந்தாங்குளம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று, அங்கு பொதுநபர்கள் சிலருடன் இணைந்து மதுபான விருந்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின்னர், மதுபோதையில் இருந்த மேற்படி பொறுப்பதிகாரியை பொலிஸ் உத்தியோகத்தர் அழைத்துச் சென்று மல்லாகம் பகுதியில் உள்ள விடுதி அறையில் தங்க வைத்து விட்டு வெளியே வர முயற்சித்துள்ளார். இதன்போது, பொறுப்பதிகாரி அறையை பூட்டிவிட்டு அந்தப் பொலிஸ் உத்தியோகத்தரைத் தவறான முறைக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார்.

இதனால், கோபமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், பொறுப்பதிகாரியைத் தாக்கிவிட்டு வெளியே வந்துள்ளார். இந்த விடயத்தை அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர், சக உத்தியோகத்தர்களுக்குத் தெரியப்படுத்தியவேளை சக உத்தியோகத்தர் ஒருவர் அந்தப் பிரச்சினையைப் பொலிஸ் விசேட பிரிவினர் முறைப்பாடுகள் செய்யும் புத்தகத்தில் பதிவு செய்தனர்.

இதையடுத்து மேற்படி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இருப்பினும் அந்த விசாரணை முறையாக நடைபெறாமல், பொறுப்பதிகாரியைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை எனக் கூறி பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை காலை 8 மணிக்கு அழைப்பதாகவும், அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணத்தில் இருந்து அங்கு செல்வதற்குச் சற்றுத் தாமதமாகினால், விசாரணைகளை மேற்கொள்ளாமல் திருப்பி அனுப்பி இழுத்தடிப்பு செய்வதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன், குறித்த விடயத்தை பொலிஸ் விசேட பிரிவினர் முறைப்பாடுகள் செய்யும் புத்தகத்தில் எழுதிய பொலிஸ் உத்தியோகத்தரும், பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரும் பொறுப்பதிகாரியால் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டு நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இன்று, தான் வேலையிலிருந்து விலகுகின்றார் என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளார் என அறியமுடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.