பராமரிப்பாளரை சினமுற்று தாக்கிய பாண்டா (Video)

சீனாவின் சொங்சிங் விலங்குத் தோட்டத்தில் ‘பாண்டா’ கரடி ஒன்று அதன் பராமரிப்பாளர் மீது சினம் கொண்டு தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது, கட்டுப்பாடு மிகுந்த பகுதிக்குள் சென்றுவிடாமல் தடுக்கும் பொருட்டுப் பராமரிப்பாளர் கதவை மூடியபோது தவறுதலாக ‘பாண்டா’வின் பாதத்தில் கதவு மோதிவிட்டது.

விரைந்து அங்கிருந்து நகர்ந்துசென்ற பராமரிப்பாளர் மீண்டும் அணுகியபோது சினமுற்ற ‘பாண்டா’ அவரைக் கீழே தள்ளித் தாக்கியது.

சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு விடுவித்துக்கொண்ட பராமரிப்பாளர் அவ்விடத்திலிருந்து ஓடிச் செல்வதைக் காணொளி ஒன்று காட்டுகிறது.

செப்டம்பர் 19ஆம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்த காணொளி டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

பராமரிப்பாளருக்குப் பெரிய காயங்கள் ஏதும் இல்லை என்றும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் விலங்குத் தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரும் அந்த ‘பாண்டா’வும் நலமுடன் இருப்பதாக அது கூறியது.

‘பாண்டா’ மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதா என்பதை அறியும் பொருட்டு அதன் நடத்தை கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.