சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை பயன்பாடு இலட்சம் பேர் கைது.
சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை – பயன்பாடு:
இலங்கையில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 206 பேர் கைது.
அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவிப்பு
இலங்கையில் 2015 பெப்ரவரி முதல் 2020 செப்டம்பர் வரையான காலப்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி., ஹேஷா விதானகேவால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பில் 2015 ஆம் ஆண்டு 73 ஆயிரத்து 444 பேரும், 2016இல் 75 ஆயிரத்து 304 பேரும், 2017இல் 81 ஆயிரத்து 156 பேரும், 2018இல் 96 ஆயிரத்து 489 பேரும், 2019இல் 89 ஆயிரத்து 308 பேரும், 2020 செப்டெம்பர் 18ஆம் திகதி வரை 54 ஆயிரத்து 505 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸ், இலங்கை சுங்கம், இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, இராணுவம், கலால் திணைக்களம் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் ஆகியன சட்டவிரோத போதைப்பொருள் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
இதில் இலங்கைப் பொலிஸாரால் மேற்படி காலப்பகுதியில் 40 ஆயிரத்து 751 கிலோ சட்டவிரோத போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன” – என்றார்.