மகாத்மா காந்தியின் ஜனன தின நிகழ்வு.

மகாத்மா காந்தியின் 155 ஆவது ஜனன தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்தியத் துணைத்தூதர் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ். மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன், யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அருள், கோப்பாய் ஆசிரியர் கல்லூரி அதிபர் லலீசன் மற்றும் சமய சமூகப் பிரதிநிதிகள், இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது காந்தீயம் பத்திரிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதன் முதல் பிரதியை வடக்கு மாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவனிடம் இந்தியத் தூதுவர் சாய் முரளி கையளித்தார். அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளால் சைக்கிள் பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் மர நடுகையும் இடம்பெற்றது.


………….

Leave A Reply

Your email address will not be published.