வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியபடி பேரணி

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியப்படி பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதற்கிடையே, கொல்கத்தாவில் உள்ள கங்கா கட் பகுதி தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மண் விளக்குகளை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துவா்கள் போராட்டத்துக்கு வழிவகுத்துள்ளது. சம்பவ நாளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பயிர்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய், கொலை தொடா்பான ஆதாரங்களைச் சேதப்படுத்தி வழக்குப் பதிய தாமதித்ததாக தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல், அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த சம்பவம் குறித்து சிபிஐ புலனாய்வு மேற்கொண்டு வருகிறது. பெண் மருத்துவா் கொலையில் மூவரும் சதியில் ஈடுபட்டாா்களா என்ற கோணத்தில் சிபிஐ புலனாய்வில் ஈடுபட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், 31 வயதான முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், இளநிலை மருத்துவர்கள், பயிற்சி மாணவர்கள் உள்ளிட்டோர் தீப்பந்தம் ஏந்தியப்படியும் கோஷங்களை எழுப்பியபடியும் பேனர்களை சுமந்து கொண்டு பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதற்கிடையே, போராட்டத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் உள்ள கங்கா கட் பகுதி தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மண் விளக்குகளை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மருத்துவா்களின் பாதுகாப்பு மற்றும் பிற பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதற்கும், பயிற்சியாளர்கள், மருத்துவமனைகளில் மருத்துவா்களின் கண்ணியமான பணிச்சூழலை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க 10 போ் கொண்ட தேசிய பணிக்குழுவை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அமைத்தது. இந்தக் குழுவின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

விசாரணையின் போது, ​​ மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம், ஓய்வறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டுதல் மற்றும் பயோமெட்ரிக் ஆகிய பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா். அந்தப் பணிகள் 50 சதவீதத்தை தாண்டவில்லை என்றும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதற்கு வெள்ள பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முழுமையடையாமல் தாமதிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அனைத்துப் பணிகளையும் அக்டோபா் 15-க்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெயா் மற்றும் புகைப்படங்கள் சமூக சமூக வலைதங்களில் இன்னும் பரவி வருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெயா், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை நீக்க வேண்டும் என்று விக்கிபீடியா தளத்துக்கு அளிக்கப்பட்ட உத்தரவு அனைத்து சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதிகள், பெண் மருத்துவரின் பெயா், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனைத்து சமூக ஊடகங்களும் உடனடியாக நீக்க வேண்டும் என நீதிபதிகள் மீண்டும் அறிவுறுத்தினர்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபா் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.