35 குற்றச்சாட்டுகள் : முன்னாள் அமைச்சர் S ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

7 ஆண்டில் நண்பர்கள் என்று அவர் சொன்ன 2 தொழிலதிபர்களிடமிருந்து ஈஸ்வரன் சுமார் 403,300 வெள்ளி மதிப்பிலான பரிசுகளைப் பெற்றார்.

62 வயது ஈஸ்வரன் மொத்தம் 35 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

அவற்றில் அவர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (24 செப்டம்பர்) 5 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

அதற்கான தண்டனையை நீதிபதி இன்று அறிவித்தார்.

தற்காப்பு வழக்கறிஞர்களும் அரசாங்க வழக்கறிஞர்களும் முன்வைத்த வாதங்களைக் கருத்தில்கொண்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று நீதிபதி வின்சென்ட் ஹூங் (Vincent Hoong) கூறினார்.

இந்த வழக்கில் சிறைத்தண்டனை விதிக்க முடிவுசெய்தால் அது 8 வாரத்திற்கும் மேல் இருக்கவேண்டாம் என்று தற்காப்பு வழக்கறிஞர்கள் இதற்குமுன்னர் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அரசாங்க வழக்கறிஞர்கள் 6 முதல் 7 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று கோரியிருந்தனர்.

ஈஸ்வரன் குற்றம் புரிந்த காலம், அவ்வாறு செய்தபோது அவர் வகித்த பதவி, பொதுநலன், பொதுக் கழகங்கள் மீதான நம்பிக்கைக்கு உண்டான ஒட்டுமொத்தச் சேதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டதாக நீதிபதி கூறினார்.

தண்டனையை இம்மாதம் 7ஆம் தேதி மாலை 4 மணி வரை ஒத்திவைக்கும்படி ஈஸ்வரன் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கு நீதிபதி ஒப்புதல் வழங்கினார்.

ஆயினும் சிறைத்தண்டனையின் தொடக்கம் உத்தரவுகளுக்கு ஏற்ப மாற்றப்படக்கூடும் என்று மூத்த தற்காப்பு வழக்கறிஞர் டவிந்தர் சிங் கூறியிருக்கிறார். மேல்முறையீடு செய்யக்கூடிய சாத்தியம் உள்ளதை அது குறிக்கிறது.

ஈஸ்வரன் 800,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனின் வழக்கில் பரிசுகளை வழங்கியவருக்கு நிதி சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதி நிராகரித்தார்.

அது ஈஸ்வரனின் தண்டனைக்குரிய நிலையையோ பொதுக் கழகங்களுக்கு ஏற்படுத்திய சேதத்தையோ குறைக்காது என்றார் அவர்.

சிங்கப்பூரிலிருந்து டோஹாவுக்குச் சென்ற விமானப் பயணம் தொடர்பில் தொழிலதிபர் ஓங் பெங் செங்கிற்கு (Ong Beng Seng) எப்படியும் செலவாகியிருக்கும் என்ற தற்காப்புத் தரப்பின் வாதம் பொருந்தாது என்றார் நீதிபதி.

திரு ஓங் ஈஸ்வரனுக்கு அவருடைய தனிப்பட்ட விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்கியது வழக்கில் கவனிக்க வேண்டிய ஒன்று என்று அவர் சொன்னார்.

ஈஸ்வரன் அவரின் அதிகாரபூர்வ வேலைகளுடன் திரு ஓங் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தும் அவர் திரு ஓங்கிடமிருந்து பரிசுகளை வாங்கியதை நீதிபதி சுட்டினார்.

F1 Grand Prix Green Room நுழைவுச்சீட்டுகளை ஈஸ்வரன் விற்கவில்லை என்று தற்காப்பு வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர்.

அவற்றை அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டது.

அந்த வாதத்தையும் கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்றார் நீதிபதி.

அந்த நுழைவுச்சீட்டுகள் அவருக்குக் கொடுத்திருக்கப்படவில்லை என்றால் அவை மற்றவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கும் என்று அவர் சொன்னார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் வகுத்த பதவியின் நேர்மைத்தன்மைக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தியதாக நீதிபதி குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.