நஸ்ரல்லாவின் இடத்தை நிரப்பவிருந்ததாக நம்பப்படுபவரைக் குறிவைத்துத் தாக்குதல்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு அருகே உள்ள நிலத்தடி பாதுகாப்பிடத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) காலை பெரிய அளவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது.
அண்மையில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உறவினரும் அவரின் இடத்தை நிரப்பவிருந்ததாக நம்பப்படுபவருமான ஹாஷெம் சஃபீதினைக் குறிவைக்கும் நோக்கில் அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று இஸ்ரேலிய அதிகாரிகள் மூவர் தெரிவித்தனர்.
பெய்ரூட்டுக்கு அருகே மூத்த ஹிஸ்புல்லா தலைவர்கள் பங்கேற்ற சந்திப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் தங்களின் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் காஸா போர் தொடங்கியதிலிருந்து பெய்ரூட்டுக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், அவ்வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும். லெபனான் அரசாங்கத்துக்குச் சொந்தமான செய்தி அமைப்பு அத்தகவலை வெளியிட்டது.
பெய்ரூட்டுக்குத் தெற்கே உள்ள, மக்கள்தொகை அதிகமாக இருக்கும் தாஹியா என்ற பகுதியில் பல வெடிப்புகள் இடம்பெற்றன. அப்பகுதி, ஹிஸ்புல்லாவின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகும்.
அங்கு நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக பெய்ரூட்டில் கட்டடங்கள் குலுங்கின. அதோடு, சம்பவம் நடந்த இடத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் இருந்த மக்களாலும் வெடிப்புச் சத்தத்தைக் கேட்க முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சஃபீதின் உள்ளிட்ட ஹிஸ்புல்லா தலைவர்களின் நிலை உடனடியாகத் தெரியவில்லை.
தென் லெபனானில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறுமாறு வியாழக்கிழமையன்று (அக்டோபர் 3) இஸ்ரேல் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதற்குச் சில மணிநேரம் கழித்து தாஹியாவில் தாக்குதல் நடத்தப்பட்டது.
அது, ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் விரிவுபடுத்துவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
போர், மத்திய கிழக்கில் மேலும் சில இடங்களுக்குப் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதால் அந்தக் கவலை எழுந்துள்ளது.
நஸ்ரல்லா, ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானியத் தளபதி ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் இந்த வாரம் இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளைப் பாய்ச்சியது. அதனையடுத்து ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.