மன்னாரில் கடந்த கால அரசினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மீனவ சமூகத்திற்குப் பல்வேறு அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது : உலக மீனவர் சமூகத்தின் செயலாளர் ஹேமன்குமார

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தில் ஏற்பாட்டில் இன்று (08.10) செவ்வாய், பிற்பகல் 3 மணி அளவில் மன்னார் நகர கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே உலக மீனவர் சமூகத்தின் செயலாளர் ஹேமன்குமார தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மக்களின் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராயவும் அவர்களோடு கலந்துரையாடவும் நாங்கள் மன்னாருக்கு வருகை தந்திருக்கிறோம். மன்னார் மக்களிடம் உள்ள பிரச்சினைகள் அநேகமானவற்றை அறிந்து கொண்டோம்.

அதில் முதலாவதாக இந்திய மீனவர்களது ரோலர் எனப்படும் மீன்பிடி படகுகளின் பிரச்சினை, கனிய மணல் எடுக்கும் பிரச்சினை, காற்றாலைகளினால் மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள், காணிகளை திருடி அபகரித்துள்ள பிரச்சினை, இறால் பண்ணைகளினால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள், போன்ற பிரச்சனைகள் எமக்கு அறிவுறுத்தப்பட்டன.நாங்கள் மீனவர்களையும், மக்களையும் சந்தித்தோம். அப்போது அவர்கள் தாங்கள் படும் இன்னல்கள் குறித்து எம்மோடு கலந்துரையாடினார்கள். பல வருடங்களாக அவர்கள் பட்டு வரும் துன்பங்களுக்கு கடந்த கால அரசாங்கங்கள் எந்த ஒரு தீர்வையும் தரவில்லையென அவர்கள் குறை கூறுகின்றனர்.

புதிய அரசினால் ஏதாவது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறார்கள். மற்றும் கனிய மண்ணகழ்வினால் ஏற்படும் பாதிப்பினைத் தடுப்பதற்குவதற்கு புதிய ஜனாதிபதி ஒரு நல்ல தீர்வை எடுப்பார் என தாங்கள் நம்புவதாகக் கூறினார்கள்.

அத்தோடு அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள 52 காற்றாலைகளையும் அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புவதாக தெரிவித்தார்கள்.

இலங்கைக்கான ஒரு சட்ட வரையறை உண்டு அதை பாவித்து இந்திய மீனவர்கள் அத்துமீறல்களை அரசு நிறுத்த வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால் அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என அவர்கள் குறைபட்டு கொள்கிறார்கள். அதானி நிறுவனத்தினால் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் காரணமாக மக்கள் படும் துயரத்தை தீர்க்க வேண்டும் என அரசாங்கத்திடம் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். விடத்தற் தீவு மற்றும் பேசாலை பகுதிகளில் நீர்நிலை மீன் வளர்த்தல்கள் காரணமாக மக்களுக்கு பெரும் இன்னல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இவற்றிற்காக அநேகமாக பனை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார்கள், இயற்கையை அழித்துள்ளார்கள். இதனால் எதார்த்த வாழ்வுக்கும், சூழலுக்கும், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். பனை மரங்களை அழித்ததினால் பெண்கள் செய்து வந்த தொழில் துறை இல்லாமல் ஆகி வாழ்வாதாரம் இல்லாமற் போயுள்ளது. இதனால் பெண்களின் வருமானத்தில் ஒன்றரை லட்சம் ரூபா,அளவு வருடம் ஒன்றுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். போருக்கு பின்னான வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் இப்படியான பிரச்சனைகளினால் அவர்களின் மீண்டு வர முடியாமல் இருக்கிறது எனக் கவலை தெரிவிக்கிறார்கள். அதிலிருந்து மீண்டு வருவதற்கு இயற்கையான நிலவரங்கள் உருவானால் மட்டுமே தம்மால் தலை நிமிர்ந்து வாழ முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். எனவே இவற்றைத் தீர்த்து வைக்குமாறு நாங்கள் அரசிடம் முறையிடவுள்ளோம். என்றார்.

குறித்த கலந்துரையாடலில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் மீனவ சமூகத்தினர் என 50 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

ரோகினி நிஷாந்தன்

Leave A Reply

Your email address will not be published.