ஈஸ்டர் தினப் படுகொலைகளை புதிதாக விசாரிக்க இலங்கை அரசாங்கம் உத்தரவு.

இலங்கையின் புதிய அரசாங்கம் 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘ஈஸ்டர் சண்டே’ வெடிகுண்டுச் சம்பவத்தை புதிதாக விசாரிக்க உத்தரவிட்டு உள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 279 பேர் உயிரிழந்தனர்.

அந்தச் சம்பவம் பற்றி இதுவரை நடத்தப்பட்ட விசாரணை, படுபாதகச் செயலுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டதாக அரசாங்கம் தெரிவித்து உள்ளது.

இலங்கை வரலாற்றில் பதிவான ஆக மோசமான சம்பவம் அது.

உள்ளூர் ஜிகாதி குழுக்கள் அந்தத் தற்கொலைத் தாக்குதல்களுக்குக் காரணம் என்றும் அரசாங்க உளவுப் பிரிவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அதற்கு உறுதுணை புரிந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய உளவு அமைப்பு தகவல் தெரிவித்தும் இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக மற்றொரு கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஈஸ்டர் தின படுகொலைகளைப் பற்றி விசாரிக்க பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டபோதிலும் சில ஆதாரங்கள் மறைக்கப்பட்டுவிட்டன,” என்றார்.

மேலும் அவர், “இதற்கு முன்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் முரண்பாடுகள் ஏற்பட்டதை அறிய விரும்புகிறோம். எனவே, புதிதாக விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவதே சரியாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.