20 ஆவது திருத்தம் தொடர்பான தீர்ப்புக் கசிந்தது.

20 ஆவது திருத்தம் தொடர்பான தீர்ப்புக் கசிந்தது

ஜனாதிபதிக்கு சட்டவிலக்கு அளிக்க
முட்டுக்கட்டை போட்டது நீதிமன்றம்!

– நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரமும்
இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர்தான்

– தேர்தல் ஆணையத்தைக் கட்டுப்படுத்தவும் தடை

உத்தேச இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தின் 3, 5, 14, 22 ஆம் பிரிவுகள் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறாமல் அவற்றை அரசமைப்புத் திருத்தமாக நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது என உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. எனினும், அந்தப் பிரிவுகளில் உரிய மாற்றம் செய்து கொண்டு ஏனையவற்றையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவுடன் இருபதாவது திருத்தத்தை நிறைவேற்றி நடைமுறைக்குக்கொண்டு வரலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்திருக்கின்றது.

தேர்தல்கள் தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றிய பிரிவு, ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு வழங்கும் சரத்து, நாடாளுமன்றக் கலைப்புக்கான ஜனாதிபதியின் அதிகாரம், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் ஆகியவை தொடர்பிலேயே சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது.

அரசமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பாக ஐந்து நீதியரசர்களைக்கொண்ட உயர்நீதிமன்றம் கடந்த வாரம் வரை விசாரணை நடத்தியிருந்தது.

இந்த இருபதாவது திருத்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுதாரர்களின் சமர்ப்பணங்களைச் செவிமடுத்த நீதியரசர்கள், தமது முடிவை சபாநாயகருக்கும், ஜனாதிபதிக்கும் இன்று காலையில் அனுப்பி வைத்த நிலையில் அது வெளியில் கசிந்துள்ளது.

அடுத்த, நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் அந்தத் தீர்ப்பை சபையில் அறிவிக்கும்போதே அது பொது ஆவணமாகும். எனினும், அதற்கு முன்னர் இன்றே அதன் விவரம் ஊடக மட்டங்களுக்குக் கசிந்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிகாரை, சிசர டி ஆப்ரூ, விஜித் கே.மலலகொட ஆகிய நால்வரும் ஒரே தீர்ப்பைச் சேர்ந்து வழங்கியுள்ளனர்.

நீதியரசர் பிரியந்த ஜயவர்த்தனா மட்டும் தேர்தல்கள் தொடர்பான ஜனாதிபதியின் கடமைகள், நாடாளுமன்றக் கலைப்புக்கான ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பான விடயங்களிலும், பிற அம்சங்களிலும் ஏனைய நான்கு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்புக்குத் தாமும் இணங்குகின்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு வழங்குதல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விசேட அதிகாரங்களை மட்டுப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆணை பெறவேண்டும் என்று ஏனைய நீதியரசர்கள் வழங்கிய முடிவு குறித்து அவர் எதுவும் தெரிவிக்காமல் விட்டுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி பின்வரும் சரத்தைகளை நிறைவேற்றுவதாயின் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் அனுமதியுடன் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்பட வேண்டும்.

சரத்து 03

அரசமைப்பின் இருபதாவது திருத்தத்தின் சரத்து 03 ஜனாதிபதியின் கடமைகள், பொறுப்புகள் பற்றிப் பேசுகின்றது.

அதிலே, தேர்தல் ஒன்றை சுயாதீனமான முறையில் நடத்துவதற்கான சூழலையும் நிபந்தனையையும் பேணுமாறு தேர்தல் ஆணையம் கோரினால் அதை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என்ற பழைய ஏற்பாடு நீக்கப்படுவதாக இருந்தது. அதைச் செய்வதாயின் – அந்த ஏற்பாட்டை நீக்குவதாயின் சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் அனுமதி பெறுவது அவசியம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சரத்து 05

ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது, அவருக்குப் பதவிக் காலம் முழுவதும் சட்ட விலக்களிப்பு உள்ளது என்பது முன்னைய மூல ஏற்பாடு.

அவருக்கு எதிராக அரசமைப்பின் 126 பிரிவின் கீழ் அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட முடியும் என்பது 19ஆவது திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்டது. அதை நீக்குவதையே இருபதாவது திருத்தத்தின் 5ஆவது சரத்து பிரேரித்தது. ஆனால், அதைச் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்பட வேண்டும் என இப்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சரத்து 14

நாடாளுமன்றம் ஒன்றை அதன் பதவிக் காலம் ஆரம்பித்து நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கலைக்க முடியாது என்பது 19ஆவது திருத்த ஏற்பாடாகும். இதனை ஒரு வருடமாகக் குறைக்கும் திருத்தத்தை இருபதாவது திருத்தத்தின் 14ஆம் பிரிவு பிரேரித்தது. அதனை ஏற்க உயர்நீதிமன்று இப்போது மறுத்துவிட்டது.

தேவையாயின் இந்தக் கால எல்லையை நாடாளுமன்றத்தின் முழுப் பதவிக் காலமான ஐந்து வருடத்தில் அரைவாசியாக – இரண்டரை வருடங்களாக – மாற்றினால் அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி சட்டமாக்கலாம் என நீதிமன்றம் இப்போது தீர்மானித்துள்ளது.

சரத்து 22

இது சுதந்திரத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் பற்றிக் குறிப்பது.

தேர்தல் அறிவிக்கப்பட்டால், அரச நிர்வாகத்தின் பல மட்டங்கள் மீதான நியாயாதிக்கம் தேர்தல் ஆணையத்தின் கீழ்வரும் என 19ஆவது திருத்தம் தெரிவித்திருந்தது. அதனை நீக்குவது பற்றிய விடயமே 22 சரத்தாக இருபதாவது திருத்தத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதை அங்கீகரிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனைச் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏனையவற்றுக்கு அனுமதி

இரட்மைக் குடியுரிமை பெற்றோர் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்ய இடமளிக்கும் ஏற்பாடுகள் உட்பட இருபதாவது திருத்தத்தின் ஏனைய சரத்துக்களை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு வழங்கவும் – தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் சிலவற்றை விலக்கவும் அனுமதி வழங்குவதற்கு உயர்நீதிமன்றம் மறுத்திருப்பதும், அதைச் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருப்பதும் முக்கிய விடயங்கள் என உயர் சட்டவட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.