பாதிக்கப்பட்ட உறுப்புகளைப் பெற்ற அறுவருக்கு ‘எச்ஐவி’

ரியோ டி ஜெனிரோ: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைவழி பாதிக்கப்பட்ட உறுப்புகளைப் பெற்றுக்கொண்ட ஆறு நோயாளிகளிடம் ‘எச்ஐவி’ (HIV) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ உறுப்பு நன்கொடைச் சேவையிடமிருந்து பாதிக்கப்பட்ட உறுப்புகளை நோயாளிகள் பெற்றதாக அக்டோபர் 11ஆம் தேதி மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

தானமாக அளிக்கப்படும் உறுப்புகள் மீது சோதனைகள் நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள ஆய்வுக்கூடம் ஒன்று தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரியோ சுகாதாரச் செயலகம் தெரிவித்துள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான மாநிலத்தின் காத்திருப்புப் பட்டியலில் உள்ள அறுவருக்கு, தானம் வழங்கிய இருவரின் உறுப்புகள் பொருத்தப்பட்டன. பின்னர், அந்த அறுவருக்கும் ‘எச்ஐவி’ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைவழி பாதிக்கப்பட்ட உறுப்புகளை வேறு நோயாளிகளும் பெற்றுள்ளனரா என்பதைக் கண்டறியப் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், 2023ஆம் ஆண்டு டிசம்பரில் ஆய்வுக்கூடம் இயங்கத் தொடங்கியது முதல் சேமிக்கப்பட்டு வரும் அனைத்து உறுப்புகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகச் செயலகம் தெரிவித்தது.

இதற்குமுன் இத்தகைய சம்பவம் நடந்ததில்லை என்றும் அது குறிப்பிட்டது.

இரண்டு உறுப்புச் சோதனைகளிலும் தவறு நேர்ந்ததற்கு யார் காரணம் என்பதைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரியோ டி ஜெனிரோவின் உறுப்பு மாற்றுச் சேவை 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் 16,000க்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளதாக மாநில அரசாங்கம் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.