அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோட்டாவுக்கு நடந்ததே அநுரவுக்கும் நடக்கும்! – எச்சரிக்கின்றது ரெலோ.

அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோட்டாவுக்கு நடந்ததே அநுரவுக்கும் நடக்கும் என்று ரெலோ இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்தார்.

ஜனத்தா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) என்ற அடிப்படை சிங்கள இனவாதத்தில் வளர்க்கப்பட்டு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்து கொண்ட அநுர அரசு, கோட்டாபயவின் தம்பியர்கள் என்பதை தமிழர் விவகாரத்தில் காட்ட முனைந்தால் ஆட்சிக் கதிரையில் இருந்து வெளியேறுவதற்கான நாட்களை எண்ணும் நிலைமை உருவாகும்.

முன்னாள் ஐனாதிபதி கோட்டா தமிழர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினை மட்டும்தான் உள்ளது எனவும், அதிகாரப் பகிர்வு தேவையற்றது எனவும், 13 ஆம் திருத்தம் நீக்கப்பட வேண்டும் எனவும் கூறிக் கொண்டு அதனை நீக்கப் புதிய அரசமைப்பு குழுவைத் தன்னிச்சையாக நியமித்ததன் விளைவை எப்படி அனுபவித்தார் என்பதை நாடே அறியும்.

கோட்டாவின் வெளியேற்றத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி ஜனாதிபதிக் கதிரைக்கு வந்து விட்டு கோட்டா தமிழர் விவகாரத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டை அநுர கையில் எடுப்பதாக இருந்தால் கோட்டா சந்தித்த அதே நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும்.

தமிழர் விவகாரத்தை இனவாதமாகக் கையில் எடுப்பதான வெளிப்பாடுகள்தான் தொடர்ச்சியாக அநுர அரசின் பிரதிநிதிகள் அனைவரும் வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. இப்படியான வெளிப்பாடு நாட்டின் மாற்றத்துக்கு ஆரோக்கியமாக அமையமாட்டாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.