யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டார் : இஸ்‌ரேலிய ராணுவம்

ஹமாஸ் அமைப்பின் தலைவரும் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான யாஹ்யா சின்வரைத் தனது படைகள் கொன்றுவிட்டதாக அக்டோபர் 17ஆம் தேதியன்று இஸ்‌ரேல் தெரிவித்துள்ளது.

இது இஸ்‌ரேலுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகவும் ஹமாஸ் அமைப்புக்குக் கடும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

சின்வரின் மரணம், போரை முடிவுக்குக் கொண்டுவர கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு என்று மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் போர் தொடரும் என்று இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.

சின்வர் கொல்லப்பட்டது குறித்து திரு நெட்டன்யாகு மகிழ்ச்சி தெரிவித்து தமது படைகளைப் பாராட்டினார்.

“காஸாவில் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது முடிவின் தொடக்கமாகும்,” என்றார் திரு நெட்டன்யாகு.

அக்டோபர் 16ஆம் தேதியன்று காஸாவின் தென்பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போது சின்வரைக் கொன்றதாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

அதிரடி நடவடிக்கை நடத்தப்பட்ட இடத்தில் சின்வர் இருப்பது இஸ்‌ரேலியப் படைகளுக்குத் தெரியாது என்று கூறப்படுகிறது.

சேதமடைந்த கட்டடத்தில் அவரது சடலம் கிடப்பதைக் காட்டும் படங்களை இஸ்‌ரேலிய ராணுவம் வெளியிட்டது.

Leave A Reply

Your email address will not be published.