ஆளில்லா வானூர்தி கொண்டு தம்மை கொல்ல முயற்சி: ஹிஸ்புல்லா மீது நெட்டன்யாகு குற்றச்சாட்டு.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, சனிக்கிழமை (அக்டோபர் 19) தம்மைக் கொல்ல முற்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பைக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லெபனானிலிருந்து பாய்ச்சப்பட்ட ஆளில்லா வானூர்தி ஒன்று அவரின் வீட்டைத் தாக்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்ததைத் தொடர்ந்து நெட்டன்யாகு இதனைக் கூறினார்.
வானூர்தித் தாக்குதலை ஹிஸ்புல்லா இதுவரை பொறுப்போற்கவில்லை. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் உள்ளிட்டவர்களை இஸ்ரேல் கொன்றதன் எதிரொலியாக இந்த வானூர்தித் தாக்குதல் அரங்கேறியது.
நெட்டன்யாகு வெளியிட்ட ஓர் அறிக்கையில், “ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா, என்னையும் என் மனைவியையும் இன்று கொல்ல முற்பட்டது கடுமையான தவறு,” எனக் கூறினார்.
இஸ்ரேலியக் குடிமக்களுக்குத் தீங்கு விளைவிக்க முற்படும் எவரேனும் அதற்குப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்த நெட்டன்யாகு, போரின் எல்லா இலக்குகளையும் எட்டுவதில் மறுவுறுப்படுத்தினார்.
வானூர்தித் தாக்குதல் நடந்தபோது நெட்டன்யாகுவும் அவரின் மனைவியும் வீட்டில் இல்லை எனப் பிரதமர் அலுவலகம் முன்னதாகக் கூறியிருந்தது. இஸ்ரேலின் சிசேரியா நகரில் நெட்டன்யாகுவின் வீட்டைக் குறிவைத்த நடத்தப்பட்ட வானூர்தித் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
லெபனானிலிருந்து பாய்ச்சப்பட்ட மூன்று வானூர்திகளில் இரண்டு இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் பின்னர் கூறியது.