மாவைப் பிசையக் கால்கள்; சுவையைக் கூட்ட ‘ஹார்பிக்’: பேசுபொருளான காணொளி
ஜார்க்கண்ட்: உணவுப் பாதுகாப்பு உலகெங்கும் பெருங்கவலை தரும் ஒரு விவகாரமாக உருவெடுத்து வருகிறது. சுகாதாரமற்ற சூழலில் தயாரிக்கப்படும் உணவை உட்கொண்டு உடல்நலக் குறைவுக்கு ஆளாவோரைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், இணையத்தில் வலம்வரும் ஒரு காணொளி, மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
காணொளியில், ‘கோல்கப்பா’ தயாரிக்கும் ஆண்கள் இருவர் அதற்கான மாவை, வெறுங்கால்களால் பிசைகின்றனர். அருகில் தயார்செய்யப்பட்ட கோல்கப்பா பொட்டலங்கள் கிடப்பதையும் பார்க்க முடிகிறது.
கோல்கப்பாவை அடிக்கடி உண்போர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற வாசகத்துடன் ‘எக்ஸ்’ தளத்தில் அந்தக் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது.
சமூக ஊடகங்களில் காணொளி வெளிவந்ததை அடுத்து, உள்ளூர்வாசிகள் கொதித்துப் போயினர். பயனீட்டாளர்களின் சுகாதாரத்தைச் சீர்குலையச் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை என்று சுட்டினர்.
சுகாதாரத் தரநிலைகளுக்கு எதிராகச் செயல்பட்ட அந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்குப்பின் உணவுக்குச் சுவையூட்ட அபாயகரமான பொருள்களைச் சேர்ப்பது குறித்தும் கைதான இருவரும் ஒப்புக்கொண்டனர். உரத்துக்குப் பயன்படுத்தப்படும் ‘யூரியா’, கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ‘ஹார்பிக்’ போன்றவற்றைச் சேர்ப்பதாக அவர்கள் கூறினர்.
இதையடுத்து, கடையைக் காவல்துறையினர் மூடிவிட்டனர்.