தில்லியில் பள்ளியருகே வெடிவிபத்து!
தில்லியில் பள்ளியருகே வெடிவிபத்து ஏற்பட்டதுபோல் சப்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். பள்ளியருகே, ஞாயிற்றுக்கிழமை (அக்.20) காலையில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டதுபோல் சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர், தடயவியல் குழுக்கள், வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சி.ஆர்.பி.எஃப். பள்ளியின் சுற்றுச் சுவர் சேதமடைந்தும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தும், கடைகளின் பெயர்ப்பலகைகள் சேதமடைந்த நிலையிலும் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வுக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், நிலத்தடி கழிவுநீர் பாதை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது, “காலை 7.47 மணியளவில் பிரசாந்த் விஹாரில் உள்ள சி.ஆர்.பி.எஃப். பள்ளி அருகே குண்டுவெடிப்பு சப்தம் கேட்டது. அங்கிருந்து புகை மூட்டம் கிளம்புவதையும் விடியோவில் பதிவு செய்தேன்’’ என்று தெரிவித்தார்.
அப்பகுதியை தீயணைப்புக் குழுவினர் உள்பட பலர் சுற்றி வளைத்துள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.