தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தொடர்ந்து நகர்த்திச் செல்லக் கூடியவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும் -மன்னார் ஆயர்.

30 வருட ஆயுத போராட்டமும் 30 வருட அகிம்சைப் போராட்டமும் எதற்காக ஏற்ப்பட்டனவோ அந்தக் காரணங்கள் இன்னும்  தீர்க்கப் படாமலேயே உள்ளன. இந்நிலையில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லக் கூடியவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டுமென மன்னார் ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில்

முக்கியமான திருப்புமுனைகள் நிறைந்த ஒரு காலக்கட்டத்தில் நாம் நிற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலின்போது தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை வடக்கு கிழக்கிலும் இந்தத் தேர்தலில் ஏற்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

மாறிவரும் அரசியல் பொருளாதார சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் தொடர்பான சமகால அரசியல் தொடர்பான நமது பார்வையிலும் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு  மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற்கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடிவந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.

உறவினர் , ஊரவர் , நண்பர் போன்ற வட்டங்களைக் கடந்து செயற்படக்கூடிய தமிழ்த்தேசியத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய இலஞ்ச ஊழலற்ற செயற்திறன் வாய்ந்த சொல்லுக்கும் செயலுக்கும் ஒத்திசைவுள்ள நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.

என்றுமில்லாதவாறு இம்முறை அதிக வேட்பாளர்கள்  களமிறங்கியுள்ளமை பொதுமக்கள் மத்தியில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை வாக்காளார்கள் தமது கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டுமென அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

ரோகினி நிஷாந்தன்

Leave A Reply

Your email address will not be published.