தீங்கிழைக்கும் விதத்தில் தலையிட்டதாக பயிற்சி ஊழியரை நீக்கிய TikTok நிறுவனம்.
TikTokஇன் உரிமையாளரான ByteDance நிறுவனம், அதன் பயில்நிலை ஊழியர் ஒருவரைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது.
நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தில் அந்தப் பயிற்சி ஊழியர் தீங்கிழைக்கும் விதத்தில் தலையிட்டதாக ByteDance கூறியது.
ஊழியர் ஏற்படுத்திய சேதத்தைக் குறித்துப் பரவும் செய்தியை நிறுவனம் மறுத்துள்ளது.
அதில் சில தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக நிறுவனம் சொன்னது.
அந்தச் சம்பவத்தைப் பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுவதைத் தொடர்ந்து நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
ByteDanceஇன் Doubao எனும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் திட்டம் ChatGPT-யைப் போன்றது. சீனாவின் ஆகப் பிரபலமான தானியக்க உரையாடல் வசதி அது.
பயில்நிலை ஊழியர் நிறுவனத்தின் விளம்பரத் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிவந்ததாகவும் அவருக்கும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் நிறுவனம் கூறியது.
சம்பவத்தில் நிறுவனத்தின் இணைய வர்த்தகச் செயல்பாடுகளும் மொழி சார்ந்த செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களும் பாதிக்கப்படவில்லை என்று ByteDance கூறியது.