ஏர் இந்தியா விமானங்களில் செல்ல வேண்டாம்: காலிஸ்தானி பயங்கரவாதி மிரட்டல்
நவம்பர் 1 முதல் 19ஆம் தேதிவரை ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அக்குறிப்பிட்ட நாள்களில் ஏர் இந்தியா விமானம் ஒன்றின்மீது தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியாகக் கூறியிருப்பதாக ‘இந்தியா டுடே’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்குமுன் இதே காலகட்டத்தில்தான் சீக்கிய இனப் படுகொலை நிகழ்ந்தது.
‘நீதிக்கான சீக்கியர்கள்’ (எஸ்எஃப்ஜே) அமைப்பின் நிறுவனரான பன்னுன், இந்தியாவில் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர். அவர் கனடா, அமெரிக்கா என இரட்டைக் குடியுரிமை பெற்றவர்.
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் அதலபாதாளத்திற்குச் சென்றுவரும் நிலையில், பன்னுனின் இம்மிரட்டல் வெளியாகி இருக்கிறது.
தன் நாட்டிலுள்ள காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளைக் குறிவைத்து இந்தியா செயல்படுகிறது என்றும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற பயங்கரவாதியின் கொலையில் இந்தியாவிற்குத் தொடர்புள்ளது என்றும் கனடா குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டும் இதே போன்றதொரு மிரட்டலை பன்னுன் விடுத்திருந்தார். 2023 நவம்பர் 19ஆம் தேதி டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம் மூடப்படும் என்றும் அதற்கு வேறு பெயர் சூட்டப்படும் என்றும் கூறிய அவர், அந்நாளில் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்திருந்தார்.
அதேபோல, 2023 டிசம்பர் 13ஆம் தேதி அல்லது அதற்குமுன் இந்திய நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
மேலும், இவ்வாண்டு குடியரசு நாளன்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானையும் அம்மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் கௌரவ் யாதவையும் கொல்லப்போவதாக அவர் மிரட்டல் விடுத்தது நினைவுகூரத்தக்கது.
இந்திய உள்துறை அமைச்சு பன்னுன்மீது கீழறுப்பு, பிரிவினைவாதக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. அவரது ‘எஸ்எஃப்ஜே’ அமைப்பிற்கும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.