ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை ஏற்காவிடின் அதன் தரவுகள் பொய் என்பதை அரசு நிரூபிக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் ராஜித வலியுறுத்து.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பிழை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற நீதியரசர்களைக்கொண்ட குழுவினால் தயாரிக்கப்படும் விசாரணை அறிக்கையை அரசியல் நோக்கத்துக்காகத் தயாரிக்கப்பட்டது என எவ்வாறு தெரிவிக்க முடியும் எனக் கேட்கின்றோம்.”

இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி, அதன் சூத்திரதாரிகளைச் சட்டத்துக்கு முன்னால் நிறுத்துவதாக ஜனாதிபதி தலைமையிலான அரசு தெரிவித்திருந்தது. அநுரகுமார மீது நம்பிக்கை வைத்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் மறைமுகமாக அநுரகுமாரவுக்கு ஆதரவளிக்குமாறு தெரிவித்து வந்தார்.

ஆனால், உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது வெளிவந்திருக்கும் ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் அல்விஸ் தலைமையிலான குழுவின் விசாரணை அறிக்கையில் 17 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது.

ஆனால், இந்த 17 பேரில் ஒருவர்தான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் சிரேஷ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன. இவர்தான் தாக்குதல் தொடர்பில் இந்தியாவின் புலனாய்வுப் பிரிவு, தெளிவான தகவல் அனுப்பி இருந்தபோதும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறி இருக்கின்றார்.

ஆனால், அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வந்ததுடன் பொது மக்கள் பாதுகப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்னவை நியமித்து, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் பாெறுப்பையும் அவருக்கே வழங்கியுள்ளார். இவ்வாறான நபரிடமிருந்து உண்மையான விசாரணையை எதிர்பார்க்க முடியுமா எனக் கேட்கின்றோம்.

அதேநேரம் அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வந்த பின்னர் வழங்கிய நியமனங்கள் தொடர்பில் விமர்சனங்கள் இருக்கின்றன. அந்த நபர்களின் பின்னணி தொடர்பில் தேடிப்பார்க்காமலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அனுபவம் இல்லாமையே இதற்குக் காரணமாகும்.

அத்துடன் உதய கம்மன்பிலவினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்திருக்கின்றார்.

ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர்களைக் கொண்ட குழுவொன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டு தயாரிக்கப்படும் அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவிக்குமானால் இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளையும் அவ்வாறு தெரிவித்தால், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கப் போகின்றது? இந்த அரசும் புதிய விசாரணை ஒன்றை ஆரம்பித்து அதனை 5 வருடங்களுக்கு இழுத்துக்கொண்டு செல்லும் நிலைதான் ஏற்படும்.

அதேநேரம் வெளியிடப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பிழை என்பதை அரசு நிரூபிக்க வேண்டும்.

எனவே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி காலத்தைக் கடத்தாமல் விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை அடிப்படையாக்கொண்டு, இந்தத் தாக்குதலின் பின்னணியைக் கண்டு பிடிக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.