டெலிகிராமில் அதிகரிக்கும் மோசடி கவலை அளிக்கிறது.

டெலிகிராம் செயலியில் குற்றச்செயல்கள், மோசடிகள் அதிகரிப்பு கவலை அளிப்பதாக உள்துறைத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 21ஆம் தேதியன்று உலகளாவிய மோசடித் தடுப்பு ஆசிய உச்சநிலை மாநாடு 2024ல் இதுகுறித்து அவர் பேசினார்.

இந்த உச்சநிலை மாநாடு சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தில் நடைபெறுகிறது.

“மோசடிக்காரர்கள், டெலிகிராம் செயலியில் புதிய ஒளிவழிகளையும் உரையாடல் குழுக்களையும் உருவாக்கி அவற்றில் மற்றவர்களைச் சேர்த்து அவர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கின்றனர்,” என்றார் சுன்.

2023ஆம் ஆண்டின் முற்பாதியுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் டெலிகிராம் செயலி மூலம் புரியப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை 137 விழுக்காடு அதிகரித்தது.

டெலிகிராம் செயலி மூலம் புரியப்படும் மோசடிக் குற்றங்களில் முதலீடுகள் தொடர்பான மோசடியும் வேலை மோசடியும் அடங்கும்.

டெலிகிராம் செயலி மூலம் மோசடி மட்டுமின்றி மற்ற குற்றச் செயல்களும் தலைவிரித்தாடுவதாக சுன் கூறினார்.

டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி பேரளவிலான சட்டவிரோத நடவடிக்கைகளில் சட்டவிரோதக் கும்பல்கள் ஈடுபடுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

“டெலிகிராம் செயலி மூலம் இணைய ஊடுருவல் மூலம் பெறப்பட்ட தரவுகளும் (கடன் அட்டை விவரங்கள் மற்றும் மறைச்சொற்களும் அடங்கும்), தரவுகளைத் திருட பயன்படுத்தப்படும் தீங்குநிரல்களும் விற்கப்படுகின்றன. இது மிகவும் கவலைக்குரியது,” என்று சுன் கூறினார்.

உச்சநிலை மாநாட்டுக்கும் உலகளாவிய மோசடித் தடுப்புக் கூட்டணி ஏற்பாடு செய்துள்ளது.

மாநாடு அக்டோபர் 22ஆம் தேதியன்று நிறைவடைகிறது.

உச்சநிலை மாநாட்டில் சட்ட அமலாக்கம், அரசாங்கப் பிரதிநிதிகள், வங்கி மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஆக அண்மைய மோசடிப் போக்குகளை எதிர்கொள்ளும் வழிவகைகள் குறித்து அவர்கள் கலந்துரையாடுகின்றனர்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 1799 மோசடித் தடுப்பு அழைப்பு எண்ணுக்கு நாள்தோறும் சராசரியாக 250 அழைப்புகள் கிடைப்பதாக சுன் கூறினார்.

இந்த எண், ஸ்கேம்ஷீல்டு சுவீட்டின் ஒரு பகுதியாகும்.

ஸ்கேம்ஷீல்டு செயலி 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிவைக்கப்பட்டது.

இச்செயலி மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை 1.1 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.