சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-ஏர் இந்தியா கூட்டு பயணச்சீட்டு முறை மேலும் 51 நகரங்களுக்கு விரிவாக்கம்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸும் (SIA) இந்தியாவின் ஏர் இந்தியா விமான நிறுவனமும் கூட்டு நுழைவுச்சீட்டு விற்பனை முறையை மேலும் 51 நகரங்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டு உள்ளன.
அவற்றில் 40 அனைத்துலக நகரங்கள், எஞ்சிய 11 நகரங்களும் இந்தியாவுக்குள் உள்ளவை.
ஒரு நிறுவனம் மற்ற நிறுவனத்தின் விமானப் பயணச் சீட்டுகளை விற்பதற்கான குறியீட்டுப் பகிர்வு (Codeshare) முறையை அந்த இரு விமான நிறுவனங்களும் இணைந்து 2010ஆம் ஆண்டு ஏற்படுத்தின.
தற்போது அந்த ஏற்பாட்டில் முதன்முதலாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. அந்த விரிவாக்கம் அக்டோபர் 27 முதல் நடப்புக்கு வருகிறது.
அதன்படி, ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூருக்கும் சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் 56 பயணங்களுக்கான பயணச் சீட்டுகளை அந்த இரு விமான நிறுவனங்களிடம் இருந்தும் வாங்க முடியும்.
அந்த எண்ணிக்கை தற்போது 14ஆக உள்ளது.
மேலும், டெல்லிக்கும் அமிர்தசரஸ், பெங்களூரு, கோயம்புத்தூர், லக்னோ, வாரணாசி ஆகிய நகரங்களுக்கும் இடையிலான உள்நாட்டு விமானப் பயணச் சீட்டுகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடம் வாங்க முடியும்.
அந்தப் பட்டியலில் இன்னும் பல நகரங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
அதேபோல, ஆஸ்திரேலியா, கம்போடியா, மலேசியா, இந்தோனீசியா, தென்கொரியா, புருணை, ஜப்பான், நியூசிலாந்து, பிலிப்பீன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளின் 29 கூடுதல் நகரங்களுக்கான சிங்கப்பூர் ஏர்லைன்சின் பயணச்சீட்டுகளை ஏர் இந்தியா வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
ஏர் இந்தியாவின் விமானங்கள் பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நகரங்களுக்குச் செல்வதற்கான பயணச் சீட்டுகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் வாங்கிப் பயனடைய முடியும்.
அந்தப் பட்டியலில் பாரிஸ், பிராங்ஃபர்ட், மிலான், நைரோபி, லண்டன் ஆகிய முன்னணி நகரங்கள் இடம்பெற்று உள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் இந்த ஏற்பாடு பயணத் தொடர்புகளை அதிகரிப்பதில் தமக்குப் பெருமகிழ்ச்சி என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நிபுன் அகர்வால் கூறினார்.
அதேபோல, இந்தியாவுக்குச் சென்று வரும் பயணிகளுக்கான வசதிகளை இந்தப் புதிய நடைமுறை அதிகரிக்கும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைமை வர்த்தக அதிகாரி லீ லிக் சின் தெரிவித்தார்.