தீவிரவாத பயத்தில் சுற்றுலா பயணிகள் திரும்பினர்.. சுற்றுலா பகுதிகள் வெறிச்சோடியுள்ளன
இன்று , இலங்கையில் பல சுற்றுலாப் பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
அறுகம்பே, வெலிகம போன்ற இஸ்ரேலிய பிரஜைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள தமது பிரஜைகள் கூடுமானவரை ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு போன்ற பகுதிகளுக்கு விரைவில் செல்லுமாறும் இஸ்ரேலும் நேற்று அறிவித்திருந்தது.
சில பயணிகள் தங்களின் பயணத் திட்டங்களை ரத்து செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார்கள், மற்றவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கிறார்கள்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்ய வந்த இஸ்ரேல் பிரஜைகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக திரும்பிச் சென்றுள்ளனர்.
திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்காக இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என்று இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகமும், இஸ்ரேலிய அரசும் அறிவித்த நிலையில் உல்லாச பயணிகள் வருகை குறைந்துள்ளது .
எவ்வாறாயினும், நாட்டிலும், சுற்றுலாப் பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.