85 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியா முழுவதும் 85 விமானங்களுக்கு இன்று(அக். 24) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் பெரும்பாலாக புரளியாகத்தான் இருக்கின்றன. இதுவரை 170-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்நிலையில் இன்று(அக். 24) வியாழக்கிழமை இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா, ஆகாசா ஏர் ஆகியவற்றின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனால், கடந்த 10 நாட்களில் 250-க்கும் மேற்பட்ட விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலாக சமூக வலைத்தளங்கள் மூலமாகவே இந்த மிரட்டல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
வெடிகுண்டு புரளியால் சுமார் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். விமான நிறுவனங்களுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
ஏனெனில் ஒரு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் விமான சேவை பாதிப்பு, பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்து தருதல் என ரூ. 3 கோடி செலவாகிறது. அதுமட்டுமன்றி விமானத்தில் செல்ல பயணிகள் மத்தியில் சற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.