அமெரிக்கர்கள் இலங்கைக்கு வர தடை விதிக்கப்படவில்லை.. இந்த பாதுகாப்பின்மை இன்று நேற்று ஏற்பட்டதல்ல : விஜித ஹேரத்

அமெரிக்கா தனது பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கு பயணத் தடை விதிக்கவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அருகம்பே பகுதிக்கு செல்வது பாதுகாப்பற்றது என மாத்திரமே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் அரசாங்கத்திற்கு அறிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களும் சந்தேகத்திற்கிடமான எதனுடனும் கைது செய்யப்படவில்லை எனவும் சந்தேகத்தின் பேரில் மாத்திரமே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவமாக கருத வேண்டாம் எனவும், இந்த பாதுகாப்பின்மை இன்று நேற்று ஏற்பட்டதல்ல எனவும், மத்திய கிழக்கில் யுத்த மோதல்கள் ஆரம்பமான காலத்திலிருந்தே குறித்த நாடுகளால் இந்த பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பாதுகாப்பற்ற நிலை இந்நாட்டிற்கு மாத்திரமன்றி ஏனைய நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இலங்கைக்கு விஜயம் செய்ய வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினர் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், மத்திய கிழக்கில் இடம்பெற்ற யுத்த மோதல்களின் பின்னர் இஸ்ரேலியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.