மக்களைச் சிறிதளவும் சிந்திக்கவே விடாது அரசியல் செய்யும் தமிழ்த் தேசியத் தரப்பு! – தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் சந்திரகுமார் குற்றச்சாட்டு.

“தமிழ்த் தேசியம் சார்ந்த அனைவருமே மக்களைச் சிறிதளவும் சிந்திக்க விடாது அரசியலைச் செய்கின்றனர். மக்கள் பல்வேறு துன்பத்தில் உள்ள போதும் அவர்கள் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.”

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் செ.சந்திரகுமார் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன். அரசியலுக்கு வருகின்ற அனைவருமே சொல்கின்றார்கள் மக்களுக்குச் சேவை செய்யப் போகின்றோம் என்று.

ஆனால், என்னைப் பொறுத்த வரை கடந்த 14 வருடங்களாக வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடக்கம் அன்றாப் பிரச்சனைகள் வரை நன்கு அறிந்தவன் நான். அந்தவகையில் தொடர்ச்சியாக எனது சேவையை அவர்களுக்காகச் செய்திருக்கின்றேன்.

அதன் அடிப்படையில் அந்தச் சேவையின் பலனாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, எனது சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் இந்தத் தேர்தலில் இறங்கியிருக்கின்றேன்.

இங்கு தமிழ்த் தேசியம் சார்ந்த அனைவருமே மக்களைச் சிறிதளவும் சிந்திக்கவிடாது அரசியலைச் செய்கின்றனர். மக்கள் பல்வேறு துன்பத்தில் உளன்று கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்களோ பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதுவே அவர்களது அரசியலாக உள்ளது.

நாங்கள் அப்படியல்ல. எனவே, மக்களே சிந்தியுங்கள் இவருக்கு வாக்கைப் போடலாமா என்று பலமுறை சிந்தியுங்கள். மாற்றம் என்பது மக்கள் மத்தியில் இருந்தே வரவேண்டும். தொடர்ச்சியாக ஒருவரைத் தெரிவு செய்து விட்டு ஒன்றும் மாறவில்லை என்று சொல்வதும் முறையல்ல. எனவே, மக்களது சிந்தனை மாறவேண்டும். அதன்போதே அவர்களது வாழ்க்கையும் மாறும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.