அருகம்பே தாக்குதல் குறித்து இந்திய உளவு அமைப்புகள் எதுவும் கூறவில்லை : விஜித ஹேரத்

இந்த நாட்டில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பில் இந்திய புலனாய்வு அமைப்புகள் அறிவித்தல் விடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில் பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய புலனாய்வு அமைப்புகளால் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அது முற்றிலும் தவறான செய்தி எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிலை குறித்து பொறுப்புடன் உண்மைகளை தெரிவிக்கவும், மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தும் தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்கவும் அமைச்சர் ஊடகங்களுக்கு வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த மூன்று பேரும் இந்நாட்டின் பிரஜைகள் என அமைச்சர் கூறினார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள், மனப்பூர்வமாக அல்லது அறியாமலேயே ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்களா என அறிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“மத்திய கிழக்கின் இராணுவச் சூழ்நிலையில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும். இலங்கை பயணத்தின் பாதுகாப்புக்கு சில தடைகள் இருக்கலாம் என சில தகவல்கள் வெளியாகின.

“உளவுத்துறைக்கு இது பற்றிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சரியாக ஒரு மாதமாகிறது. மாதத்தில் பலமுறை சந்தித்தோம்.”

தகவல் கிடைத்ததும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் அருகம்பே, பண்டாரவளை நீர்வீழ்ச்சி, மாத்தறை , வெலிகம மற்றும் அஹுங்கல்ல கடற்கரைகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

“இந்த மாத தொடக்கத்தில் இருந்தே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த தகவல் ஆழமாக விவாதிக்கப்பட்டது. புலனாய்வு அமைப்புகளும், காவல்துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளன என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.