ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு : பாதுகாப்பு உறுதி என ஜனாதிபதி உத்தரவாதம்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தது.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவித்தார்.
முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவசர சேவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் முக்கியமான பங்காளியாகும், இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி மற்றும் சுற்றுலா சந்தையாகவும் மூன்றாவது பெரிய இறக்குமதி சந்தையாகவும் செயல்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கையின் சந்தை அணுகலை விரிவுபடுத்துதல், வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் போன்றவற்றில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தமது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் உறுதிப்படுத்தினர்.
அறிவுப் பரிமாற்றம், கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளில் புதிய பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளது.
தொழிற்கல்வி, கடல்சார் விவகாரங்கள், முதலீடு, அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை வலுப்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிப்பாட்டை தூதுக்குழு வலியுறுத்தியது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை அமைதியான முறையில் நடத்தியதற்காக இலங்கைக்கு தூதுக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். நெதர்லாந்து, பிரான்ஸ், ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்து அந்நாட்டு ஜனாதிபதிகள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்திகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜேர்மன் தூதுவர் Dr. Felix Neumann, இத்தாலிய தூதுவர் Damiano Frankovig, ருமேனிய தூதர் Stelluta Ahire, பிரெஞ்சு தூதர் Marie-Noil Duris மற்றும் நெதர்லாந்து துணை தூதர் Evams Rutjens ஆகியோர் கலந்து கொண்டனர்.