ஈரானின் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்.
ஈரான் மீது இஸ்ரேல் அக்டோபர் 26ஆம் தேதியன்று தாக்குதல் நடத்தியது.
அண்மையில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இத்தாக்தகுதல் அமைவதாக இஸ்ரேல் கூறியது.
ஹிஸ்புல்லா அமைப்பின் அப்போதைய தலைவர் ஹசான் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதை அடுத்து, அக்டோபர் 1ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஈரான் ஏறத்தாழ 200 ஏவுகணைகளைப் பாய்ச்சியது.
இந்நிலையில், ஈரானிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேலியத் தற்காப்பு படை தெரிவித்தது.
ஈரானிடமிருந்தும் அதன் ஆதரவில் செயல்படும் அமைப்புகளிடமிருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாக அது கூறியது.
“எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆற்றல்கள் முழுமையாக இயக்கிவிடப்பட்டுள்ளன,” என்று இஸ்ரேலியத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இதற்கிடையே, ஈரானியத் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றி வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.