உடன்பாடு ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய-சீன எல்லையில் இருநாட்டுப் படைகளின் வெளியேற்றம் தொடங்கியது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அண்மையில் உடன்பாடு ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் கிழக்கு லடாக்கில் இருந்து இருநாட்டுப் படையினரும் அவரவர் நாடுகளுக்குத் திரும்பத் தொடங்கி உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

குறிப்பாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக்கின் டெப்சாங் பகுதியில் உள்ள ‘ஒய்’ சந்திப்பு மற்றும் டெம்சோக்கில் உள்ள சார்டிங் நுல்லா சந்திப்புப் பகுதிகளில் இருந்து இருநாட்டு ராணுவ வீரர்களும் வெளியேறத் தொடங்கினர்.

சார்டிங் நுல்லா சந்திப்பின் மேற்குப் பகுதியிலிருந்து இந்திய வீரர்களும் கிழக்குப் பகுதியிலிருந்து சீன வீரர்களும் திரும்பிச் சென்றனர். டெம்சோக்கில் இருதரப்பிலும் அமைக்கப்பட்டு இருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020 ஜூன் 15ஆம் தேதி சுற்றுக்காவல் மையம் எண்14ல் இந்திய-சீன நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.

மணிக்கணக்கில் நீடித்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீன வீரர்களும் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டாலும் அதுகுறித்த தகவலை சீனா மறைத்துவிட்டது.

மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளும் அந்தப் பகுதியில் படைக்குவிப்பில் ஈடுபட்டன. அதனால், போர் மூளும் அச்சம் எழுந்தது.

மோதல் சம்பவம் இந்திய-சீனத் தூதரக உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது. ஆயுதப் போருக்குப் பதிலாக வார்த்தைப் போர் முற்றியது. இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், ஆண்டுகள் உருண்டோடிய பின்னர், லடாக்கில் அமைதி நிலவுவதற்கான நம்பிக்கை தோன்றியது. உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதன் பலனாக, லடாக்கின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இருதரப்பினரும் சுற்றுக்காவல் பணிகளை நிறுத்தவும் துருப்புகளை வெளியேற்றவும் கடந்த திங்கட்கிழமை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதுபற்றிய அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) வெளியிடப்பட்டது.

அதற்கு மறுநாள் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் நேரடியாகச் சந்தித்துப் பேசினர். ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அந்த இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

உடன்பாட்டின்படி படைகளை விலக்கிக்கொள்ளும் பணியை இரு நாடுகளும் தொடங்கி உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.