யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக யாப்புக்கு மாறாகப் புதியவர் நியமனம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பதவிக்குச் சட்டவிரோதமான முறையில் புதிதாகப் பதவியேற்றவருக்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக இதுவரை காலமும் பதவி வகித்தவர் தனது கற்கைகளை முடித்து வெளியேறிய நிலையில் அவருடைய பதவிக்கு முன்னைய ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்த ஒருவர் யாப்பு விதிகளுக்கு முரணாகப் புதிதாகப் பதவியேற்றுள்ளார். இதனால் புதிய கலைப்பீட மாணவர் ஒன்றியத்துக்கான பிரதிநிதித்துவம் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர்.

சட்டவிரோதமான பதவியேற்பு தொடர்பான விசாரணைகளை உடன் மேற்கொள்ளுமாறு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கைக் கடிதம் ஒன்றும் நேற்று வெள்ளிக்கிழமை துணைவேந்தரிடமும், மாணவர் நலச்சேவை அலுவலகத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதான மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பதவி வகிக்கும் நிலையில் முன்னைய ஒன்றியத்தின் காலம் நிறைவடைந்த நிலையில் வறிதாக்கப்பட்ட செயலாளர் பதவிக்குக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஒருவர் புதிதாகப் பிரதான மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பதவியைக் கைப்பற்றியமை யாப்பு விதிமுறைகளுக்குச் சட்டவிரோதமானது என்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க வட்டாரங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்யும் வகையிலும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்குச் சமூக மட்டத்தில் இருக்கும் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையிலும் புதிதாக சட்டவிரோதமாகச் செயலாளர் பதவி கைப்பற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.