யாழில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது இன்று கொலை வெறித் தாக்குதல்!
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் பகுதியில் சனிக்கிழமை மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கரந்தன் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது ஓட்டோவில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன்போது அவர்கள் அந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்றனர்.
இதையடுத்து அங்கிருந்து திரும்பிச் சென்ற மேற்படி குழுவினர், சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் கொலை வெறித் தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண்ணும், இரு ஆண்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
மேற்படி பெண் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும், இரு ஆண்களும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.