எங்கள் அரசியல் எழுச்சியை தடுத்து நிறுத்தவே முடியாது! – தாக்குதல் நடத்தியவர்களைப் பொலிஸார் உடன் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல் எழுச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. எந்தத் தடை ஏற்பட்டாலும் அதனைத் தாண்டிச் செல்வோம். எமது கட்சியின ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அனைவரையும் பொலிஸார் உடனடியாகக் கைது செய்து அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது வன்முறைக் கும்பல் கொடூர தாக்குதலை நடத்தியிருந்தது. இந்தத் தாக்குதலில் பெண் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை வைத்தியசாலைக்குச் சென்று நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மணிவண்ணன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்கள் கூட்டணி இந்த அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. மக்களின் அமோக ஆதரவு பெருகி வருகின்றது. எங்களின் எழுச்சியைப் பொறுக்க முடியாத தரப்பு எங்கள் மீது தொடர்ச்சியாக அழுத்தங்களை உபயோகித்து வருகின்றது.
கடந்த வியாழக்கிழமை எமது வேட்பாளர் பார்த்தீபன் உள்ளிட்ட இருவரைப் பருத்தித்துறைப் பொலிஸார் சட்டவிரோதமாகக் கைது செய்தனர். இன்று சனிக்கிழமை எங்கள் அணியினர் கோப்பாய் – கரந்தன் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதெல்லாமே எமது கட்சியை மாத்திரம் இலக்கு வைத்து நடத்தப்படுகின்றது.
எங்கள் அரசியல் எழுச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. எந்தத் தடை ஏற்பட்டாலும் அதனைத் தாண்டிச் செல்வோம். பெண்கள், ஆண்களை ரவுடக் கும்பல் துரத்தித் துரத்தி அடிப்பது என்பது இந்தச் சமுதாயத்தில் முன்னர் நடந்திருக்காத மிக மோசமான காட்டுமிராண்டித்தனமாகும். இதுவொரு கேவலமான அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை.
கோப்பாய் பொலிஸார் இந்தத் தாக்குதலாளிகளை உடனடியாகக் கைது செய்து அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவர்களுக்குப் பின்னால் புலனாய்வாளர்களோ, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களோ இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும்.
இதுவொரு பாரதூரமான தேர்தல் வன்முறை. இதற்கு எதிராக நாங்கள் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்.” – என்றார்.