நிகழ்வில் கலந்துகொண்ட சக வேட்பாளர்களை அச்சுறுத்திய தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர்.

யாழ்ப்பாணத்தில் சர்வகட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற வேட்பாளர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் கேள்வி கேட்ட சக வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் செயற்பட்டுள்ளார்.

“எமது எம்.பி. எமது குரல்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சர்வகட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் கலந்துகொண்ட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் தலைமையில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உமாசந்திரா பிரகாஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சந்திரகாசன் இளங்கோவன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் கருணாநாதன் இளங்குமரன், மக்கள் போராட்ட முன்னணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கா.செந்தில்வேல், தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் மிதிலைச்செல்வி ஶ்ரீபத்மநாதன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் கௌரி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.

அந்தச் சந்தர்ப்பத்தில் பொதுமகன் ஒருவர், “தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களிடம் முன்வைக்கும் அரசியல் கொள்கை ஒற்றையாட்சியா? சமஷ்டியா? சுயநிர்ணய உரிமையா? இலங்கையில் மூன்று தசாப்தமாக இடம்பெற்ற யுத்தம் இனப்படுகொலையா? போர்க் குற்றமா? போன்ற கேள்விகளைத் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் இளங்குமரனிடம் முன்வைத்தார்.

குறித்த கேள்விகளுக்குப் பதில் வழங்கிய இளங்குமரன், “பலருக்கு ஒற்றையாட்சி என்றால் என்ன, சமஷ்டி என்றால் என்ன எனத் தெரியாது. அதை முதலில் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது. மக்களுக்கு ஒரு அரசியல் தெளிவை ஏற்படுத்திய பின் மக்களுக்கு எந்தத் தீர்வு வேண்டும் என்பதை மக்களிடமே விடுகின்றோம்.” – என்றார்.

இதன்போது சக வேட்பாளர்களான மணிவண்ணன், உமாசந்திரா பிரகாஷ் குறித்த கேள்விகளுக்கு உரிய பதில் வழங்குமாறு கோரியபோது, சக வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் ஒருமையிலும் பேசினார் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் இளங்குமரன்.

இதனை அந்தக் கூட்டத்திலிருந்த சக வேட்பாளர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். “ஜே.வி.பி. வேட்பாளர்களை அச்சுறுத்துகின்றது. எங்களை அடக்கி ஆள நினைக்கின்றது” – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சுகாஸ் தெரிவித்தார்.

Screenshot

Screenshot

Leave A Reply

Your email address will not be published.