நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக் குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர்,

“எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும், 21 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 396 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆதலால் வேட்பாளர்கள் சட்டங்கள் மற்றும் சுற்றுநிருபத்துக்கு அமைய ஜனநாயக ரீதியில் பிரசார நடவடிக்கைகளை எதுவிதமான முரண்பாடுகளுமின்றி ஆரோக்கியமாக மேற்கொள்வதனை எதிர்பார்க்கின்றோம்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களுக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்படவுள்ள 48 வாக்கெண்ணும் நிலையங்களுக்கும், 17 அஞ்சல் வாக்கெண்ணும் நிலையங்களுக்கும் மற்றும் பெறுபேறு தயாரித்து வெளியிடும் நிலையத்துக்கும் வேட்பாளர்களின் முகவர்களைச் சரியான பொறிமுறையூடாக சட்டத்தின் மூலம் நியமித்து நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதனை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படச் சிறப்பான ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இம்முறை யாழ். மாவட்ட செயலகத்தில் இயங்கும் முறைப்பாட்டுப் பிரிவுக்கு மேலதிகமாக சாவகச்சேரி, சண்டிலிப்பாய் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முறைப்பாட்டுப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.” – என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் தேர்தல்கள் உதவி ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் தெளிவூட்டல்களை முன்வைத்தார்.

மேற்படி கலந்துரையாடலில் அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக் குழுத் தலைவர்கள் பங்குபற்றினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.