யாழில் ஆறு ஆசனங்களையும் தமிழரசுக் கட்சிக்கு வழங்குங்கள் – மக்களிடம் சுமந்திரன் வேண்டுகோள்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்குங்கள் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்தக் கட்சியின் பேச்சாளர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
யாழ். வடமராட்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களின் பலமான அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அவ்வாறு ஒற்றுமையாக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி முதலில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் ஒற்றுமையாகப் பலமான அமைப்பாகக் கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது.
இந்தக் கூட்டமைப்பில் இருந்த கட்சிகளுக்கிடையில் அடுத்த தேர்தலில் ஏற்பட்ட ஆசனப் பங்கீட்டுப் பிரச்சினையால் இதிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2010 இல் வெளியேறியது.
ஆனால், அடுத்த வருடத்திலேயே கூட்டமைப்புக்குள் வருவதற்குப் பலர் விரும்பினார்கள். அதற்கமைய அவர்களில் நேர்முகப் பரீட்சை வைத்து இரண்டே இரண்டு கட்சிகளை உள்வாங்கினோம். அதில் ஒன்று சித்தார்த்தன் தலைமையிலான புளொட் மற்றும் திரும்பவும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியை உள்வாங்கிக் கொண்டோம்.
அப்படியாகத்தான் 2011 இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலும் முகங்கொடுத்தோம். இந்த மாகாண சபைத் தேர்தலில் இரண்டு போனஸ் ஆசனங்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றபோது அதிலே ஒன்றைத் தமக்குத் தர வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிய போதும் அது தமக்குக் கிடைக்காத்தால் இந்தக் கூட்டமைப்பில் இருந்து மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி விலகிச் சென்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றைத் தனக்குத் தரவில்லை என்ற காரணத்தால் ஈ.பி.ஆர்.எல்.எப். விலகிப்போனது.
இப்படியாக ஆசனப் பங்கீடு அல்லது போனஸ் ஆசனம் அல்லது தேசியப்பட்டியல் ஆசனம் என்பவை தமக்குக் கிடைக்கவில்லை என்பதால்தான் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் பலவும் விலகிப் போயின. ஆனால், எவரையும் நாங்கள் துரத்தவில்லை. வெளியே போகவும் சொல்லவில்லை.
இவ்வாறாக ஆசனப் பங்கீடு மற்றும் போனஸ் ஆசனங்களுக்காக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய நிலையிலும் புளொட் மற்றும் ரெலோ தொடர்ந்தும் கூட்டமைப்பில் இருந்து வந்தன.
ஆனால், கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்திலே தமிழரசுக் கட்சி தனித்துப் போகப் போவதற்கு முடிவெடுத்ததாக ஒரு பொய்யான பரப்புரையொன்று செய்யப்படுகின்றது.
அதாவது மட்டக்களப்பில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்திலே இது சம்பந்தமாக ஏகமனதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதாவது தனித்துப் போட்டியிடுவது எங்களது நோக்கமல்ல. அந்தத் தேர்தல் முறையிலே ஒன்றாக இருக்கின்ற கட்சிகள் தனித்து தனித்துப் போட்டியிட்டால் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், தேர்தலுக்குப் பிறகு நாங்கள் சேர்ந்து உள்ளூராட்சி சபைகளை நிர்வகிக்கின்றமைக்கான ஆற்றல் எங்களுக்குக் கிடைக்கும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டது.
ஏனென்றால் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எங்களால் மூன்றே மூன்று சபைகளைத் தவிர ஏனைய எந்தச் சபைகளிலேயும் எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை இருக்கவேயில்லை.
அது அந்தத் தேர்தல் முறையிலே இருந்த ஒரு விடயம். ஆக எங்களுக்குள்ளேயே இருக்கின்ற கட்சிகள் ஆசனங்களை வைத்திருந்தால் நாங்கள் சேர்ந்தே அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியும் என்பதுதான் எங்களது அடிப்படையாக இருந்தது. அதுதான் அந்த எண்ணக்கருவும்.
ஆனால், அது கூட ஒரு யோசனையாகத்தான் நாங்கள் முன்வைத்தோம். இப்படிச் செய்தால் நாங்கள் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது இலகுவாக இருக்கும் என்று மற்றைய இரண்டு கட்சிகளுக்கும் நாங்கள் சொன்னோம்.
எனினும், இதை கூட ஒரு யோசனையாகச் சொல்லி அவர்கள் இணங்காவிட்டால் அதை நடைமுறைப்படுத்துவது இல்லை என்றும் தீர்மானித்தோம். அவர்களோடு பேசியபோது அவர்கள் அதற்கு இணங்கவில்லை.
அதனால் கைவிடுவோம் என்று தீர்மானித்தபோது இல்லை இல்லை நீங்கள்தானே தனிவழி எனத் தீர்மானித்து விட்டீர்களே என்று அவர்கள் கூறினர். ஆனால், நாங்கள் அப்படியொரு தீர்மானத்தை எடுக்கவில்லை. இந்தக் குழப்பத்துக்குக் கட்சி முடிவுகளை அரைகுறையாக வெளியிடும் ஊடகங்களுக்கும் பெரிய பொறுப்பு உள்ளது.
இன்றைக்கு பல ஊடகங்களுக்கு இந்தச் சிறிய நுன்னிய வித்தியாசங்கள் புரிவதில்லை. அவர்கள் தாமாகவே கட்சி முடிவு என்பது போல் தமிழரசு தனிவழி செல்லத் தீர்மானம் என்று எழுதிவிட்டார்கள்.
ஆக ஊடகங்கள் சொல்வதை நம்பி நாங்கள் சொல்வதை நம்பாமல் நீங்கள் தானே தனிவழி என ஏற்கனவே தீர்மானித்து விட்டீர்கள் என்பதால் நாங்கள் தனித்துத்தான் போவோம் என்று கூறினார்கள்.
ஆக தனித்துப் போகும் தீர்மானத்தை அவர்கள்தான் எடுத்தார்கள். நாங்கள் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும், அந்தத் தேர்தல் நடைபெறவில்லலை. அவ்வாறு தேர்தல் நடைபெறாத எஞ்சிய அந்தக் காலத்தில் நாடாளுமன்றத்திலும் நாங்கள் ஒரு அணியாகத்தான் இருந்தோம். நாங்கள் பிரியவில்லை. ஒரு அணியாகச் செயற்பட்டோம்.
ஆகவே பங்காளிகளாக இருந்தவர்களை நாங்கள் அடித்துத் துரத்தி விட்டோம் என்று சொல்வதிலே எந்த உண்மையும் கிடையாது. எனினும், அவர்கள் தாங்களாகப் போனாலும் அது எங்களது கட்சியைத் தூய்மைப்படுத்துவதிலே பெரிய பங்கு அளித்திருந்தது. நாங்கள் துரத்தவில்லை. அவர்களாகப் போவதும் எங்களது கட்சியைத் தூய்மைப்படுத்துவதில் பெரிய பங்காற்றியிருக்கின்றது.
ஆனாலும், ஒற்றுமை என்கின்ற ஏக்கம் எங்கள் மக்கள் மனங்களிலே இருக்கின்றது. அது தவறான ஒரு ஏக்கம் அல்ல. நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், யாரோடு ஒன்றாக இருப்பது என்பதில் பெரிய கேள்வி இருக்கின்றது.
அது டக்ளஸோடு ஒன்றாக இருக்கலாமா? பிள்ளையானோடு ஒன்றாக இருக்கலாமா? கருணாவோடு ஒன்றாக இருக்கலாமா? கட்சியை விட்டு கட்சி தாவுகின்ற வியாழேந்திரனோடு ஒன்றாக இருக்கலாமா? அப்ப யாரோடு ஒன்றாக இருப்பது என்பதுதான் கேள்வியாக உள்ளது.
எங்களுடைய ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு வவுனியாவில் கேக் வெட்டி அரசின் இந்த வெற்றிக்கு எங்களுடைய பங்கும் இருக்கின்றது என்று மார்தட்டிய சித்தார்த்தனோடு ஒன்றாக இருக்கலாமா? ஆனாலும் அவரோடு ஒன்றாக இருந்திட்டம். அரச படையோடு வவுனியாவில் சேர்ந்திருந்தவர்தான் இந்தச் சித்தார்த்தன்.
மக்களுடைய எதிர்பார்ப்பு காரணமாக நாங்கள் கண்டதையும் சேர்த்து வைத்திருந்த ஒரு காலம் இருந்ததுதான். இவ்வாறான நிலையில் நெற்றியில் பட்டை அணிந்து சிவப்பு பொட்டு வைத்து ஒரு ஆன்மீகவாதி போல தென்பட்ட ஒருவரை நாங்கள் வலிந்து கொண்டு வந்து (இதற்காகப் பல தடவைகள் மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருகின்றேன்) முதல்வராக நிறுத்தினோம்.
இன்றைக்குப் பெண்களுக்குச் சாராய லைசன்ஸ்க்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு பெட்டி படுக்கையோடு யாழ்ப்பாணத்தை விட்டே அந்த ஆன்மீகவாதி போயிற்றார். ஆனால், போனவர் தன்னுடைய கட்சியையும் கூட்டி கொண்டு போயிருக்க வேண்டும்.
ஆனால், அப்படிச் செய்யாமல் சில குட்டிமான்களை விட்டுவிட்டு அவர் போயிருக்கிறார். சில மான் குட்டிகளை நீங்கள் கேளுங்கோ நான் ஒளிந்து இருக்கின்றேன் என்று கூறி இப்போது அவர் ஒளிந்திருக்கின்றார்.
அவர் பிரேமானந்தா படத்தை வைத்து கும்பிடும்போதே இவரைப் பற்றி நாங்கள் தெரிந்திருக்கோனும். ஆக இப்படியான ஒருவர் அதுவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றபோது கூட பச்சைப் பொய்யைத்தான் சொல்லிவிட்டுப் போயிருக்கின்றார்.
அதாவது தாய், தகப்பன் இல்லாத ஒரு பெண்ணுக்கு வாழ்வாதாரம் கொடுத்தேன் என்று அவர் சொல்லியுள்ளார். அந்தப் பெண்ணிண் குடும்ப வர்த்தகமே இந்த பார் நடத்துறதுதான். அவருக்கு ஒரு லைசன்ஸ் கிடைத்தவுடன் இதனை அந்தப் பார் குடும்பத்துக்கு விற்றுவிட்டு பெட்டி படுக்கையுடன் அவர் போய்விட்டார்.
ஆகவே, வாக்காளர்களாகிய நீங்கள் அவர் விட்டுப் போன அந்தக் குட்டி மான்களை நீங்கள் அடித்துத் துரத்த வேண்டும். அது எப்படியான கட்சி என்று அனைவரும் முதலில் பார்க்க வேண்டும்.
தமிழரசுக் கட்சி உறுப்பினராக மாகாண சபை நடந்து முடிகின்ற காலப் பகுதி வரை இருந்துவிட்டு ஒரு நாள் ஓய்வுகூட இல்லாமல் அடுத்த நாள் ஒரு புதுக் கட்சி தொடங்கியவர் அந்த ஆன்மீகவாதி. அதுதான் இந்தக் கட்சி. இதுதான் பார் லைசன்ஸ் கொடுத்த கட்சியும்.
இப்போது மானும் பாரும் சேர்ந்ததாகப் பல மீம்ஸ்களைப் பார்க்கின்றோம். இதேபோல் வீட்டுச் சின்னத்திலும் பீர் வந்திருக்கும். நல்ல காலம் சார்ள்ஸ் நிர்மலநாதன் தேர்தல் கேட்கவில்லை என்று தானாகவே சொல்லிவிட்டார். அவரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டார்.
இங்கு உடுப்பிட்டியிலும் ஒரு பாருக்கு எதிராக வழக்கு நடக்கின்றது. அந்தப் பாரை நிறுத்த நாங்கள் அரும்பாடு படுகின்றோம். இதேபோல் முழங்காவிலிலும் கோயிலுக்கு அருகில் என்று சொல்லி மூடி விட்டம். இதேவேளை, உயர்நீதிமன்றதிலும் அதிக பார் அனுமதிகள் என்று ஒரு வழக்கு போடப்பட்டு நடந்து வருகின்றது. இப்படியாக எதிராக நாங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றபோது எங்களுக்குள்ளேயே அங்க இங்க சுத்திக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் இந்த பார் லைசன்ஸை எடுத்துக் கொடுத்துப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களை நீங்கள் இனங்கண்டு அடித்து துரத்த வேண்டும். தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய சமூக விரோதச் செயலைச் செய்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
அதிலும் இதைக் காசுக்கு விற்பது அதாவது அரசியலை வியாபாரமாக்கிச் செய்பவர்களை அடையாளம் கண்டு விரட்டியடிக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் என்பது சிலருக்குத் தெரிந்து விட்டதால் தாங்களாகவே விலகிவிட்டார்கள்.
இங்கே பண முதலைகள் வந்து தாங்கள் அரசியலை ஆட்டிப் படைப்பது பற்றி சொல்லப்படுகின்றது. இந்தப் பண முதலைகள் பற்றி ஒரு நேர்காணலில் நாங்கள் சொன்னபோது நான் ஒருவரைப் பற்றி சொன்னேன். ஆனால், இன்னொருவர் நான் தன்னைப் பற்றி சொன்னேன் என்று நினைத்துத் தானே தொப்பியைப் போட்டுக் கொண்டு அதற்குப் பிறகு என்னைப் பற்றி பெரிய பரப்புரை செய்கின்றார்.
ஆக இவர் ஏன் இவ்வளவு துள்ளுகின்றார் என்று பார்த்தால் நான் சொன்னதை அவர் பிழையாக விளங்கிவிட்டார். அதாவது தன்னைத்தான் நான் சொன்னதாக அவர் நினைத்துவிட்டார். இந்த இரண்டும் ஒரே குட்டைக்குள் ஊறிய மட்டைகள்தான். அதில் ஒன்று தன்னைப் பற்றித்தான் நான் சொல்கின்றேன் என்று நினைத்துவிட்டது. ஆனால், நான் உண்மையில் மற்றதைப் பற்றித்தான் சொன்னேன்.
இன்றைக்கு அவர்கள் செலுத்த நினைக்கின்ற ஆதிக்கம் என்பது தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் பெரியதொரு தடை. பெரியதொரு ஆபத்து. ஏனென்றால் பணத்தால் எதையும் செய்ய முடியும் என்று நம்புகின்றவர்கள் அவர்கள். எப்படியான வழிகளில் அவர்கள் பணம் சம்பாதித்தார்கள் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
அவர்கள் எங்கள் தூய அரசியல் பயணத்தில் ஒரு பாரிய களங்கமாக இன்றைக்கு வந்திருக்கின்றார்கள். ஆனாலும், பலர் இதற்கு விலைபோய் விட்டார்கள். பார் லைசன்ஸையே விற்பவர்கள் இதற்கு விலை போவது என்ன பெரிய விடயமா?
இப்ப பலர் விலை போய் விட்டார்கள். அது யார், யார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அந்த அலுவலகத்துக்குப் போயிற்று வாறவர்கள் பற்றி எங்களுக்குத் தெரியும். யார் உள்ளே போகின்றார், யார் வெளியே வருகின்றார் என்பதும் எங்களுக்குத் தெரியும். அவ்வாறு வெளியே வரும்போது சப்பட்டையாக இருந்த பொக்கற் கொஞ்சம் பெருத்திருக்கின்றது. இது எல்லாம் ஆட்கள் காணுவதுதானே.
அதுவும் ஒரு கட்சி, இரண்டு கட்சி என்றில்லாமல் மூன்று அரசியல் கட்சி இருக்கின்றன. அதைவிட்டு மற்ற அரசியல் கட்சிக்குள்ளேயும் ஒருவர், இருவர் என விலைக்கு வாங்கிவிட்டார்கள்.
இதனுடைய நோக்கம் என்ன? பண ஆதிக்கத்தால வரப் போகின்ற நாடாளுமன்றத்தில் தங்களுடைய நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்கு முதலீடு செய்கின்றார்கள். இல்லலாவிடின் ஏன் இவ்வளவு காசைக் கொட்டுவான்.
அதுவும் நாடாளுமன்றத்தில் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என எந்தப் பக்கத்தில் இருந்தாலும் எல்லாப் பக்கத்திலும் ஒன்று, இரண்டு பேரை அப்படியே பிடிப்பதற்காகக் கொடுக்கப்கடுகின்ற முதலீடுதான் இது என்பதை நான் பகிரங்கமாகவே இன்றைக்குச் சொல்லுகின்றேன்.
ஆகவே, தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது மட்டுமல்ல நீங்கள் கொஞ்சம் துப்பறிந்து இது யார் யார் என்று கண்டுபிடித்து அவர்களை தமிழ் அரசியலில் இருந்த நீக்க வேண்டியது உங்களது பொறுப்பு. இந்தப் பொறுப்பை நீங்கள் நிறைவேற்றுங்கள். அப்படியானவர்களை முற்றாக நீக்க வேண்டும்.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இது நடந்தது. இப்படி சிலர் விலைக்கு வாங்கப்பட்டார்கள். அதற்கமைய சில பரப்புரைகள் நடந்தன. ஆனால் அதைவிட பன்மடங்கு மோசமாக இப்ப அது வேரூன்றுகின்றது.
ஆகையினால் உங்கள் செவிகளை கூர்மையாக்கி வைத்துக் கொள்ளுங்கள். வருகின்ற சங்கதிகளை கவனமாகக் கேளுங்கோ. அவதானமாக இருங்கள் நடக்கின்ற விடயங்களை கவனமாக அவதானித்தால் யார், யார் விலைபோய் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியவரும்.
ஆனால், எங்கள் கட்சியில் அப்படி எவரும் இல்லை. இதை நான் துணிந்து சொல்லுகின்றேன். எங்கள் கட்சியில் வேட்பாளர்களாக அப்படி எவரும் இல்லை. வேட்புமனுவில் தங்களுக்கும் வேட்பாளர் நியமனம் வேண்டுமென்று கேட்டு அது கிடைக்காத காரணத்தினாலே வேறு கட்சிகளில் போய் இருக்கின்ற பலர் இன்றைக்கு இதற்கு இரையாகி இருக்கின்றார்கள்.
பல அரசியல் கட்சிகளும், பல சுயேச்சைக் குழுக்களும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலே போட்டியிடுகின்றன்ம. இதற்குக் காரணம் என்ன என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவர்கள் எல்லாம ஏதோ நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்து விடும் என்று நினைத்துப் போட்டியிடுகின்றார்களா?
உண்மையாகவே அவர்களுக்கு இப்படியான ஒரு எண்ணம் இருக்கின்றதா என்றால் இல்லை. அப்ப ஏன் போட்டியிடுகின்றார்கள. என்றால் உண்மையில் இவர்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்காகப் போட்டியிடவில்லை. தங்கள் பொக்கற்றை நிரப்புவதற்காகத்தான் போட்டியிடுகின்றார்கள். ஆக வேட்பாளர் பட்டியிலில் கையெழுத்துப் போட்டால் இவர்களுக்குப் பணம் கிடைக்கும் என்பதால்தான் போட்டியிடுகின்றார்.
இதில் பெரும்பாலானவர்கள் யாரென்றே தெரியாது. இப்ப தடுக்கி விழுந்தால் கூட ஒரு வேட்பாளரில்தான் தடுக்கி விழ வேண்டும் என்பதாக யாரென்றே தெரியாதவர்கள் எல்லாம் வேட்பாளர்களாக உள்ளனர்.
இங்கு பணம் சம்பாதிப்பதற்கு நல்லதொரு வழி இப்ப பிறந்திருக்கின்றது. வேட்பாளராகப் போயிற்றா எல்லாம் சரி என்றதாக நினைக்கிறார்கள்.
உண்மையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்கள்தான் இருக்கின்றன. இந்த ஆறில் ஒன்று போனஸ். அப்ப பிரதான கட்சிக்குத்தான் இந்தப் போனஸ் ஆசனம் கிடைக்கும். அப்படியாக 2 போயிற்றால் மீதி நான்கு ஆசனங்கள்தான்.
அதிலும் அநேகமாக பிரதான கட்சிக்கு இன்னுமோர் ஆசனம் கிடைக்கும். இன்னுமொரு கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்தாலும் மிகுதிக் குழுக்கள் ஏன் போட்டியிடுகின்றார்கள். இந்தத் தேர்தல் முறையில் எஞ்சிய வாக்குகளில் அதிகூடிய வாக்கைப் பெற்றவருக்குத்தான் கடைசியாக ஓர் ஆசனம் கொடுக்கப்படும்.
இந்தத் தேர்தலில் மக்களுக்கு முன்பாக ஒரு பாரிய மாற்றத்தை நாங்கள் காட்டுகின்றோம். ஆற்றல் உள்ளவர்களை மக்கள் எதிர்பார்க்கின்ற அந்த இளையவர்களை, படித்தவர்களை நாங்கள் முன்னிறுத்தி இருக்கின்றோம்.
எங்கள் கட்சிக்குள் இது இலகுவாக செய்யப்பட்ட மாற்றம் அல்ல. உண்மையில் இலகுவான மாற்றம் அல்ல என்பதும் கட்சிக்குள் இருந்து பிரிந்து பிரிந்து போய் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்துறதும் அது இது என்று சொல்றது. அதில் இருந்தே தெரிகின்றது. ஆனாலும், மக்களுக்காக அந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆக மக்களுக்காக இந்த மாற்றத்தைச் செய்து நாங்கள் முன்னிறுத்தி இருக்கின்றபோது யாழ். தேர்தல் மாவட்டத்தில் அந்த ஆறு ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத்தான் கொடுக்க வேண்டும். மக்களிடத்தே சென்று வாக்குகளை வீணாக்காமல் தமிழரசுக் கட்சிக்குப் போடச் சொல்ல வேண்டும். அதைவிடுத்து மற்றைய தரப்புகளுக்கு அளிக்கும் வாக்கு வீணாக்கப்படும் வாக்குகள்.
இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்துக்கு ஈடுகொடுப்பதற்கு அவர்களுடைய சிந்தனையிலே எல்லோரும் சமமாக இருக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இல்லை. நாங்கள் ஒரு தேசம், நாங்கள் ஒரு மக்கள், எங்களுக்கென்று ஒரு பாரம்பரியம், பண்பாடு, அரசியல் உரித்து, சுயநிர்ணய உரிமை உண்டு என்று சொல்வதற்கு ஒரு அணியாக வடக்கு, கிழக்கில் இருந்து செல்ல வேண்டும்.
வடக்கையும் கிழக்கையும் பிரித்தவனுக்கு வடக்கும் கிழக்கும் இணைந்து நாங்கள் போய் காண்பிக்க வேண்டும். வடக்கும் கிழக்கும் இணைந்த அணியாக நாங்கள் போவதாக இருந்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியால் மட்டும்தான் இது முடியும்.” – என்றார்.