யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மக்கள் கூட்டணியினருக்குப் பிணை!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த தமிழ் மக்கள் கூட்டணியினரைச் சேர்ந்த மூவரைப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் மன்று அவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை கோப்பாய் பொலிஸ் பிரிவில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியினர் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை ஓட்டோ ஒன்றில் வந்த நால்வர் அடங்கிய கும்பல் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சென்று மீண்டும் சுமார் 30 பேருடன் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

அதில் பெண் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்டனர் எனக் குற்றஞ்சாட்டப்படும் தரப்பினரும் பரஸ்பர முறைப்பாட்டைப் பொலிஸ் நிலையத்தில் வழங்கியிருந்தனர்.

அதையடுத்து பொலிஸார், தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களுக்கு வைத்தியசாலையில் கட்டிலுடன் கைவிலங்கிட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கான மூவர் மற்றும் தாக்குதலை மேற்கொண்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவர் என 8 பேரையும் யாழ் . நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை கோப்பாய் பொலிஸார் முற்படுத்தினர்.

அதன்போது தாக்குதலுக்கு இலக்கானவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வி. திருக்குமரன் தலைமையில் 12 சட்டத்தரணிகள் மன்றில் தோன்றினர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, அனைவரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Leave A Reply

Your email address will not be published.