காஸாவில் இரண்டு நாள் போர்நிறுத்தத்தை எகிப்து முன்மொழிகிறது

இஸ்‌ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக நடந்துவரும் போரை முழுமையாக நிறுத்தும் நோக்கத்தில், இரண்டு நாள் சண்டை நிறுத்தத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணயக்கைதிப் பரிமாற்றத்துக்கும், எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி அக்டோபர் 27ஆம் தேதி முன்மொழிந்தார்.

இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனக் கைதிகளுக்குப் பதிலாக காஸாவில் உள்ள நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளைப் பரிமாறிக்கொள்வது இந்த முன்மொழிவில் உள்ளடக்கம். மேலும் 10 நாள்களுக்குள் கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று திரு சிசி கெய்ரோவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்தத் திட்டம் இஸ்ரேலிடமும் அல்லது ஹமாசிடமும் முறையாக வழங்கப்பட்டதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதியைத் தொடர்ந்து தாக்கி வருவதுடன், லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகப் போரிட்டு அதன் முக்கிய எதிரியான ஈரான் மீது விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ள தருணத்தில் திரு சிசி போர்நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.

ஐநா பாதுகாப்பு மன்றம், ஈரானின் வேண்டுகோளின் பேரில் அக்டோபர் 28 அன்று கூடும். தெஹ்ரானில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டிக்க அது ஐநா பாதுகாப்பு மன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே, உள்நாட்டில் ஈரானியத் தலைவர்கள் தாக்குதல்கள் குறைந்த சேதத்தையே ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, தாக்குதலின் கடுமையைக் குறைத்துக் கூறியுள்ளனர்.

ஈரான் போரை விரும்பவில்லை. ஆனால் “தகுந்த பதிலடி” வழங்கப்படும் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெஸெஷ்கியான் தனது அமைச்சரவையிடம் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.