விஜய்யின் தவெகவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிக் கொள்கைத் திருவிழாவாக (கொள்கைப் பிரகடனம்) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) மாலை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் பேசிய விஜய், “பிளவுபடுத்தும் அரசியல் செய்பவர்களும் திராவிட மாடல் என்கிற பெயரில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஊழல் சக்திகளும்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு எதிரிகள்,” என்று கூறினார்.

அதேவேளையில் இந்த மண்ணின் இரு கண்களான திராவிடம், தமிழ் தேசியத்தைப் பிரித்துப் பார்க்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மத அடிப்படையில் பிளவுபடுத்தும் அரசியலை விரும்பவில்லை எனக் கூறியதன் மூலம் மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு நேர் எதிரான கட்சி என்பதை வெளிப்படையாக விளக்கி விட்டார்.

தமிழ்நாட்டை ஆளும் திமுகவையும் மத்தியில் ஆளும் பாஜகவையும் விஜய் விமர்சித்துப் பேசியிருந்தார்.

மேலும் தவெக கட்சியின் கொள்கை, எதிர்கால லட்சியங்கள், 2026 தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பலவற்றை விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தவெக மாநாடு குறித்தும் அரசியல் தலைவர்கள் பலர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

பாஜகவின் ‘பி’ டீம் என்கிறார் அப்பாவு
பாரதிய ஜனதா கட்சியின் ‘பி’ டீம்தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்று பேசியுள்ளார் பேரவைத் தலைவர் அப்பாவு.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததால் பாஜக, இப்போது விஜய்யை களமிறக்கியுள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விஜய் மற்றவர்களைக் குறை சொல்லும்போதுதான் உண்மையாக இருக்கவேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று அப்பாவு கூறியுள்ளார்.

‘சி’ டீம் என்கிறார் அமைச்சர் ரகுபதி
முன்னதாக பாஜகவின் ‘சி’ டீம்தான் விஜய் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்திருந்த நிலையில், தற்போது அவரைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் அப்பாவுவும் விஜய்யை விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் ரகுபதி மேலும் கூறுகையில், “மாநாடு என்பதைவிடப் பிரம்மாண்டமான சினிமா படப்பிடிப்பு என்றே சொல்லலாம். முதல்வர் முன்னெடுத்துச் செல்லும் கொள்கையை மக்களிடம் இருந்து பிரிக்கமுடியாது. திமுகவை தாக்கிப் பேசினால் மக்கள் மத்தியில் சென்று சேரமுடியும் என்பதால் பேசுகின்றனர். கூட்டத்தைக் காட்டுவதற்காக இந்த மாநாட்டு ஷோவை நடத்தியுள்ளனர். தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தபின் கூட்டணியில் பங்கு கொடுப்பது பற்றிப் பேசட்டும்,” என்று கூறியுள்ளார் .

ரகுபதி: அதிமுக பற்றிய பேச்சே இல்லை
அதிமுக தொண்டர்களைத் தன் பக்கம் இழுக்கவே அதிமுகவை பற்றி விஜய் எதுவும் பேசவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழிசை: தம்பி விஜய் இதே வீரியத்துடன் செயல்பட வேண்டும்
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள். திமுக-வை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி வந்திருக்கிறது; குற்றம் சொல்லும் அளவிற்கு எதுவுமே பா.ஜ.க.-வில் இல்லை என்பதை தம்பி விஜய்க்கு விளக்க நான் தயாராக இருக்கிறேன்,” என்று கூறினார்.

கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு: புதிய தமிழகம் வரவேற்பு
கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்ற தவெக தலைவர் விஜய்யின் அறிவிப்புக்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார்: இளைஞர்களின் தன்னெழுச்சி
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாகப் பங்கேற்றுள்ளதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வாரிசு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தவெக மாநாட்டில் எம்.ஜி.ஆரை சுட்டிக்காட்டி பேசியதை அதிமுக வரவேற்கிறது. திமுகவை தமிழ்நாட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு தவெக மாநாடு எடுத்துக்காட்டாக உள்ளது.

தவெகவால் அதிமுகவுக்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படாது. ஆளும் கட்சியான திமுகவுக்குத்தான் தவெக பெரும் பாதிப்பாக உருவெடுக்கும். தவெக கொள்கைகள் வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

விசிக: இது ட்ரெயிலர்தான்
“விஜய் நடத்திய மாநாடு, அதில் அவருடைய பேச்சைப் பற்றி அவருடைய பாணியிலேயே சொல்ல வேண்டுமெனில் இது ஒரு ட்ரெய்லர் மட்டுமே என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

இந்நிலையில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய். அவருக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

சீமான்: கொள்கையில் முரண்
“திராவிடத்தை தனது கண்ணாகச் சொல்லும் விஜய்யின் கொள்கை வேறு, நாம் தமிழர் கட்சியின் கொள்கை வேறு. என் பயணம் என் கால்களை நம்பித்தான். பிறரின் கால்களை நம்பிப் பயணிக்கமுடியாது, நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை,” என சீமான் தெரிவித்துள்ளார்.

திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னார் என்றால், அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றல்ல. அது வேறு இது வேறு.

இது என் நாடு, என் தேசம். இங்கு வாழும் மக்களுக்கான அரசியல் தமிழ்த் தேச அரசியல். சிலவற்றுள் எங்கள் கொள்கையிலிருந்து விஜய் மாறுபடுகிறார். மற்றபடி நாங்கள் சொன்னதைத்தான் சொல்கிறார். விஜய்யை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ஆதரவு
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர், “சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது,” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.