மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக் பதவி நீக்கம்.
தனது நிர்வாகி எரிக் டென் ஹாக் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் (மேன்யூ) அக்டோபர் 28ஆம் தேதி தெரிவித்தது.
இதுவரை ஒன்பது ஆட்டங்களை விளையாடிய மேன்யூ, இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது.
“மான்செஸ்டர் யுனைடெட் ஆண்கள் முதன்மை அணி நிர்வாகியான எரிக் டென் ஹாக் தனது பொறுப்பிலிருந்து விலகி விட்டார்,” என்று அந்தக் காற்பந்துச் சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“புதிய நிர்வாகி அறிவிக்கப்படும் வரை ரூட் வான் நிஸ்டெல்ரோய் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக அணிக்குப் பொறுப்பேற்பார். அவருக்குத் தற்போதைய பயிற்றுவிப்புக் குழு ஆதரவளிக்கும்,” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற எரிக்கின் கடைசி ஆட்டத்தில், வெஸ்ட் ஹேம் யுனைடெட், மேன்யூவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
முதல் ஒன்பது ஆட்டங்களில் எட்டு கோல்களையே போட்டுள்ள மேன்யூ, பிரிமியர் லீக்கில் இப்பருவத்தில் ஆக மோசமாக விளையாடியுள்ளது என்று பல தரப்புகளிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன என்று ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.