இந்த ஆட்சியை இலகுவில் கவிழ்த்துவிடவே முடியாது! – களுத்துறை பரப்புரைக் கூட்டத்தில் அநுர சூளுரை.

“அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது.”

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

களுத்துறையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் டொலரின் பெறுமதி 400 ரூபா வரை செல்லும் என பிரச்சாரம் செய்தனர். இன்று அவ்வாறு நடந்துள்ளதா? இல்லை.

எமது பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதித்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர். சாதகமான பிரதிபலன் கிட்டியுள்ளது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எமது ஆட்சியில் அஸ்வெசும இல்லாமல் செய்யப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை. அன்று கூறிய அனைத்தும் பொய்யென உறுதியாகியுள்ளது. எனவே, பொய்களை நம்பி எவரேனும் ஏமாந்திருந்தால் அவர்களும் இன்று உண்மையை உணர்ந்திருப்பார்கள்.

எனவே, எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள். இதனால் சிலர் குழம்பிப் போயுள்ளனர். ஏதேனும் சிறு சம்பவம் நடந்தால்கூட ஆட்சி கவிழுமா என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

அறுகம்பே சம்பவம் தொடர்பில் அனைவரும் ஊடக சந்திப்புகளை நடத்துகின்றனர். அதன் மூலமாகவேனும் ஆட்சி கவிழுமா என்ற சந்தோசத்தில் அவர்கள் உள்ளனர்.

மூன்று வாரங்களுக்கு முன்னரே எமக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுற்றுலாத்துறையும் பாதிக்காத வகையில் திட்டமிட்ட அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் அதேவேளை திட்டமிட்டவர்களையும் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.