வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
உத்தர பிரதேசத்தில் ஜாமின் தொடர்பாக நீதிபதியிடம், வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்து வன்முறையில் ஈடுபட்டதால் நீதிமன்றமே களேபரமானது. மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ் நகரில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் நாஹர் சிங் என்ற வழக்கறிஞர், தனது கட்சிக்காரரின் ஜாமின் தொடர்பான விசாரணையில் ஆஜராகி வாதாடியுள்ளார். அப்போது, ஜாமின் வழங்குவது தொடர்பாக நீதிபதியுடன் வாதாடுவதற்குப் பதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஏதோ ஊர் பஞ்சாயத்தில் பேசுவது போன்று நினைத்துக் கொண்ட அந்த வழக்கறிஞர், நீதிபதியுடம் தொடர்ந்து விதண்டாவாதம் பேசி நீதிமன்றத்தின் மாண்பை சீர்குலைத்துள்ளார்.
அவருக்கு ஆதரவாக சில வழக்கறிஞர்களும் ஒன்றுகூடி, நீதிபதியிடம் குழாயடி சண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நீதிபதி, காவலர்களை உள்ளே அழைத்துள்ளார். போலீசார் வந்த பின்பும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து வரம்பு மீறி நடந்துள்ளனர். இதையடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்ற முயற்சித்துள்ளனர்.
ஆனால், போலீசாரிடமே வழக்கறிஞர்கள் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு எல்லை மீறியுள்ளனர். வேறு வழியின்றி போலீசார் தடியடி நடத்தி அவர்களை வெளியே தள்ளினர். அத்துடன், கையில் கிடைத்த நாற்காலியை எடுத்து விரட்டியடித்தனர். போலீஸ் அடிக்கு அஞ்சிய வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தலைதெறிக்க ஓடினர். போலீசார் தடியடி நடத்தியதில் ஒரு சில வழக்கறிஞர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. பலருக்கு முதுகு, கை, கால்கள் பழுத்தன.
போலீசாரின் தடியடியை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீதிபதி மற்றும் போலீசாருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். அதேவேளையில், அனைத்து நீதிபதிகளும் நீதிமன்ற பணியை நிறுத்திவிட்டு, பார் கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது நீதிபதியுடன் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர்களை, போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டத்தை பாதுகாக்கும் வழக்கறிஞர்கள், ஆலமரத்துக்கு அடியில் நடைபெறும் பஞ்சாயத்து போன்று நீதிமன்றத்தை நினைத்துக் கொண்டு ராவடி செய்வது போல் இந்த சம்பவம் அமைந்தது. தனது கட்சிக்காரருக்கு ஜாமின் கிடைக்காததால், நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு என்ற ரீதியில் வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியிடம் குரலை உசத்தி பேசியுள்ளார். இதனால், நீதிமன்றமே போர்க்களமாக மாறியது.