கண்டியில் கைது செய்யப்பட்ட லொஹான், ரத்வத்தை மிரிஹானவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இன்று (31) பிற்பகல் கண்டி மஹையாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தற்போது மிரிஹான பொலிஸாரிடம் அழைத்து வரப்பட்டுள்ளார்.
மிரிஹானிலுள்ள முன்னாள் அமைச்சரின் மனைவியின் வீட்டில் இலக்கத் தகடுகள் மற்றும் சாவிகள் இல்லாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான அமுதேனிய மண்டப வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் கார் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அந்த வீட்டை முழுமையாக சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் லொஹான் ரத்வத்தவின் மனைவியின் தாயார் வசித்து வந்தார்.
அங்கு கடந்த 26ஆம் திகதி குறித்த கார் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்து பின்னர் குறித்த வீட்டிற்கு சென்று காரை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து சுடப்பட்டு இறந்த ரத்வத்தவின் செயலாளர் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் குறித்த வாகனத்தை மிரிஹான இல்லத்தின் கேரேஜுக்கு கொண்டு வந்ததாக ரத்வத்தே மற்றும் அவரது மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சொகுசு காரை மிரிஹான பொலிஸார் எடுத்துச் செல்வதற்கு பொலிசார் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள நேரிட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.