” தியாகங்களை நினைவு கூருவோம்” – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு 68 ஆண்டுகளுக்கு முன்பு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, தற்போதைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. இதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.
மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம் என்று தெரிவித்து உள்ளார்.