சலவை டெண்டரைப் பெறுவதற்காக தலையில் கல்லை போட்டு யாழில் நடந்த கொலை… புலனாய்வின் பின் இருவர் கைது.
பருத்தித்துறை வைத்தியசாலையின் சலவை டெண்டரைப் பெறுவதற்காக தலையில் கல்லை போட்டு , யாழ்ப்பாணத்தில் சலவைத் தொழில் செய்து வந்த தம்பதியினரை கொலை செய்தமை புலனாய்வில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் கற்கோவளம் பகுதியில் தம்பதியரை கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பருத்தித்துறை பொலிஸார் கடந்த31ம் திகதி கைது செய்துள்ளனர்.
இருவரிடமிருந்தும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இரண்டு கொலைகளிலும் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் , இரு மரணங்களையும் செய்த பிரதான சந்தேகநபர் என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட தம்பதிகள் பருத்தித்துறை வைத்தியசாலையில் அழுக்கு சலவைக்கான டெண்டர் பெற்று பல வருடங்களாக அப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.அதற்காக கொலையாளி முன்வைத்த டெண்டர் நிராகரிக்கப்படலாம் என நினைத்து, அதை பெறும் நோக்கில் இவர்கள் இருவரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவருக்கு நெருக்கமான ஏனைய இருவரும் அந்த இரண்டு கொலைகளையும் செய்ய உதவியுள்ளனர். இந்த பிரதான கொலையாளி முன்பும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் எனவும் , அவரது தாயைக் கொல்லவும் முயன்றதாக இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் புனிதநகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் (53) மற்றும் அவரது மனைவி மேரி ரீட்டா (51) ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போதே பெரிய கொங்கிரீட் கற்களால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆஸ்பத்திரிக்கு துணி துவைக்கும் நபர் வராத நிலையில் , அவருக்கு செய்த தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்காததால், மருத்துவமனை ஊழியர் ஒருவர் சலவை தொழிலாளியின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கணவன், மனைவி இருவரும் தூங்கிக் கொண்டிருந்த பாயில் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
இத்தகவல் வைத்தியசாலைக்கு கிடைத்ததையடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இரண்டு மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இருவரது சடலங்களும் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.