துபாயிலிருந்து புதுடெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் துப்பாக்கிக் குண்டு.
துபாயிலிருந்து புதுடெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் இருக்கையில் துப்பாக்கிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் பேச்சாளர் சனிக்கிழமை (நவம்பர் 2) தெரிவித்தார்.
அக்டோபர் 27ஆம் தேதி புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா ஏஐ916 விமானத்தில் ஒரு பையில் அத்தோட்டாக்கள் இருந்ததாகவும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தைவிட்டு இறங்கியபிறகு நடத்திய சோதனையில் இது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் விமான நிலையக் காவல்துறையினரிடம் புகார் அளித்ததாக அவர் சொன்னார்.
மேலும், அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் நிறுவனம் தொடர்ந்து தீவிரமாகக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு, அனைத்துலக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட சூழலில் அவை அனைத்தும் போலியானவை எனத் தெரிய வந்தது. இருப்பினும், விமான நிலையங்களுக்கும் விமானங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தின் இருக்கையில் துப்பாக்கிக் குண்டுகள் கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.